நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் – பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாபரண ஊர்வலம் நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி புணர்தம் நாள் பி.என். நாராயணவர்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டது.

இதனையொட்டி கோவிலில் திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் வைத்து பூஜிக்கப்பட்டது. பந்தளம் முதல் சன்னிதானம் வரையிலான திருவாபரண ஊர்வலத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தோஷ் தலைமையிலான திரளான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுடன் மருத்துவக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் செல்கிறார்கள்.நாளை (புதன்கிழமை) மதியம் திருவாபரண ஊர்வலம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு திருவாபரண பெட்டிகள் மேள, தாளம் முழங்க தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மாலை 6 மணிக்கு திருவாபரண பெட்டிகள் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் வைத்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். பிறகு 18-ம் படி வழியாக கொண்டு சென்று திருவாபரணங்கள் அய்யப்பசாமிக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்வார்கள்.

மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனத்தையும் ஒட்டி பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே ஏராளமான பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் குடில் கட்டி தங்கியுள்ளனர். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.