`நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' – கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன்

பல தீபாவளிகள் கடந்து ஓடி சாதனை படைத்த ‘கரகாட்டக்காரன்’ ஜோடியான ராமராஜன், கனகா இருவரும் நேற்று சந்ததது தான் கோடம்பாக்கத்தின் டாக் ஆஃப் த டவுன்.

‘கரகாட்டக்காரன்’ வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அந்த படத்தின் பாடல்கள் நமது பிளே லிஸ்ட்டில் ரிபீட் மோடில் இருக்கிறது. யூடியூப்பில் அதன் காமெடி களைகட்டுகிறது. இன்னமும் மீம்ஸில் கலக்குகிறது. அப்படிப்பட்ட ‘கரகாட்டக்காரன் படத்தின் மூலம்தான் ஹீரோயினாக அறிமுகமானவர் கனகா. பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.

‘கரகாட்டக்காரன்’ படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெரிய ரவுண்ட் வந்தார் கனகா. அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகளின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நேற்று ராமராஜன் – கனகா சந்திப்பு நடந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்’ ரீரிலீஸ் குறித்த தகவல்களுக்கிடையே இந்த சந்திப்பு குறித்து `மக்கள் நாயகன்’ ராமராஜனிடம் பேசினோம்.

கரகாட்டக்காரன்

”நேத்து தான் இந்த சந்திப்பு நடந்தது. கனகாகிட்ட ரொம்ப நாளாகவே பேசணும்னு நினைச்சிருந்தேன். அவங்களோட அம்மா இறந்த சமயத்தில் நான் ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டதால, போக முடியாமல் போச்சு. சமீபத்துல அவங்களோட அப்பாவும் இறந்துட்டார். அதற்கும் என்னால போக முடியல. அதனால அவங்ககிட்ட உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். ‘வீடு மாத்துறோம். அதனால நானே உங்க வீட்டுக்கு வந்துடுறேன் சார்’னு சொன்னாங்க.

கனகாவுக்கு அவங்களோட அம்மானா ரொம்பவே உயிர். உருகிடுவாங்க. அவங்க மறைவுக்கு பிறகு தனிமையில் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேத்து அவங்க லன்ச்சுக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதும், ‘உங்களுக்கு எது பிடிக்கும்? சாப்பிட எது செய்து வைக்கணும்’னு கேட்டேன். ‘எது வேணாலும் ஓகே தான்’னு சொன்னங்க.

சந்திப்பில்

சாப்பிடும் போது பழைய நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். ‘கரகாட்டக்காரன் 2’ பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். பார்ட் டு பண்றதுல எனக்கு விருப்பமில்ல. அதனால ‘கரகாட்டக்காரன்’ படத்தை ரீரிலீஸ் பண்ணப் போறதா சொல்லியிருக்காங்க. கூடவே கனகாவின் உறவினரும் இசையமைப்பாளருமான தருண்குமாரும் உடன் வந்தார். அந்த சமயத்தில் எனது அக்கா மகனும், என்னோட ரசிகர் மன்றத்துல பொறுப்பில் இருக்கற குமாரும் இருந்தார்.

கனகா ரொம்ப ஸ்பெஷல்

எனக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்கள்ல கனகா ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட நடிச்ச ‘கரகாட்டக்காரன்’, ‘தங்கமான ராசா’ இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

நான் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தை பார்த்த பாரதிராஜா சார் என்னை கூப்பிட்டு, ‘நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணுனீங்க?’னு விசாரிச்சார். நான் இராமநாராயணன் சார்கிட்ட இருந்தேன்னு அவர்கிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஷாக் ஆகிட்டார். அவர்கிட்ட இருந்து வந்து என் ஸ்டைல்ல (கிராமத்து படம்) பண்ணியிருக்கீங்கனு சொல்லி பாராட்டினார்.

அவரது தயாரிப்பில் ஒரு படம் நான் இயக்கவும் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார். எனக்கு பிரமிப்பாகிடுச்சு. பாரதிராஜா சார் என்கிட்ட ‘ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போறீங்க?’னு கேட்டார்.

கரகாட்டக்காரன்

நான் அவரிடம் நீங்க முத்துராமன் சார் மகன் கார்த்திக்கை அறிமுகம் செய்தது போல, நான் தேவிகாவின் மகள் கனகாவை அறிமுகம் செய்ய போறேன்’னு சொன்னேன். உடனே ஓகேன்னு சொல்லிட்டார் பாரதிராஜா. அதன்பிறகு தேவிகா வீட்டுக்கு போய், கனகாவை நடிக்கக் கேட்டோம். ஆனா, ‘கனகா இப்ப படிக்கிறா. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்’னு சொன்னாங்க. இந்த சம்பவத்தை கனகாகிட்ட சொன்னேன்.

உடனே கனகா ‘நல்லா ஞாபகம் இருக்குது. நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்ட போது, வீட்டுக்குள் இருந்து நானும் என் தோழியும் கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்’னு சொன்னாங்க. அதன் பிறகு கங்கை அமரன் சார் ‘கரகாட்டக்காரன்’ எடுக்கும் போது, நான் கனகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணும் விஷயத்தை சொன்னேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம். பொதுவா நான் காலையில் எழுந்ததும் ஜெயா டி.வி.யில் தேன் கிண்ணம் வைப்பேன். பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கனகா மதியம் வர்றேன்னு சொன்னாங்க. அந்த டைம்ல டி.வி.யை ஆன் செய்தால், ‘நினைக்கத் தெரிந்த மனமே’னு தேவிகா அம்மா பாடும் பாடல் ஓடிக்கிட்டிருந்தது. இதை கனகாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்படி பல சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். இப்ப நல்லா இருக்காங்க. இனிமையான சந்திப்பாக இருந்தது.” என்கிறார் ராமராஜன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.