`படம் தொடங்கினப்ப கருணாநிதியே படத்துலயே இல்ல!' – ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன?

கறுப்பு வெள்ளை காலம் தொடங்கி முந்தா நாள் ரிலீஸ் ஆன பராசக்தி வரை மொத்த தமிழ் சினிமா உலகமுமே தன் பிறப்பு, வளர்ப்பு, வளர்ச்சி குறித்து ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட ஒரு புத்தகத்தைப் பார்த்திருக்காது. ஆனால் ஒரேயொரு தமிழ்ப் படம் குறித்து 1120 பக்கங்களில் ஒரு நூலை தந்திருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். நூலின் பெயர் பராசக்தி தடை.

’பராசக்தி’ என்றதும், 28’கட் வாங்கி ரிலீஸ் ஆன எஸ்.கே. வின் பராசக்தி நினைவுக்கு வந்தால், நீங்கள் 2 கே கிட்ஸ்.

புத்தகம் பேசும் பராசக்தி 52ல் ரிலீஸ் ஆகி, கூர்மையான கருணாநிதியின் வசனங்களோடு சிவாஜி கணேசனைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த அந்த `பராசக்தி’

’கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக’ என்றால் சட்டென புரிந்து கொள்வீர்கள் தானே?

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

’காந்தி, பாரதி என சென்று கொண்டிருந்த உங்களது ஆய்வை ஒரு தமிழ் சினிமா எப்படி ஈர்த்தது?’ என்ற கேள்வியுடன் அவர் முன் அமர்ந்தோம்.

‘’பதின் பருவ வயதுகள்லயே புத்தக வாசிப்பைத் தொடங்கிட்டேன். இன்னைக்கும் விடிஞ்சா சில பக்கங்களை வாசிக்காம தூக்கம் வராதபடி பழகிட்டேன். தவிர ஒரு விஷயத்துல சராசரியை விடக் கொஞ்சம் கூடுதலா ஆர்வம் தெரிஞ்சா அது தொடர்பான தேடல்ல இறங்கிடுவேன்.

பத்திரிகைத் துறையில் நுழைந்திருந்த சமயத்தில் பராசக்தி படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப் பட்டது. கலைஞர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்வுக்கு ஒரு பத்திரிகையாளரா போயிருந்தேன். அங்கு படம் பத்தி படத்துடன் தொடர்புடையவர்கள் பேசினது யோசிக்க வச்சது. படத்தின் வெளியீடு, அதற்கு வந்த எதிர்ப்பு, அப்போது நிகழ்ந்த வம்பு வழக்குகள் என தேட ஆரம்பிச்சேன்.

கலைஞரின் எழுத்துக்களில் இந்தப் படம் பத்தி சுருக்கமாத்தான் இருக்கு. சிவாஜி கணேசன் தரப்புல படம் பத்திச் சொல்லப்படுகிற வரலாறோ வேறொரு கோணத்துல இருக்கு. அதனால படம் வெளியான ஆண்டுகளின் ஆவணங்களை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்துல பார்த்துத் தகவல்கள் திரட்டினேன்.

தகவல் தொழில்நுட்ப வசதி இன்றைய அளவுக்கு இல்லாத அந்தக் காலத்துல அரசு அதிகார மட்டங்களில் நடக்கிற தகவல் பரிமாற்றங்கள் பொதுவெளிக்கு வரவே வராது. அந்த ஆவணங்களைப் புரட்டிய போது ’பராசக்தி’ குறித்து ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன.

படம் பேசின கருத்துகளுக்கு எதிரா கொந்தளித்த ஒரு சாரார், அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பா விவாதிக்க கூடி பேசினது, என பலரும் அறியாத அச்சு அசலான தகவல்கள் நிறையக் கிடைத்தன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு அதன் மூலமும் கொஞ்சம் தகவல்கள் கிடைச்சது.

படம் தொடர்பா அரசாங்க நடவடிக்கைகள் குறித்து திரட்டிட்டே மறுபுறம், அந்தக்காலத்துல படம் பத்தி பத்திரிகைகளில் வந்த தகவல்களையும் சேகரிச்சேன்.

’சிவாஜிக்கு நடிப்பு வரலை’ தொடங்கி படத்துக்கு எழுதப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வரை அப்படிக் கிடைச்ச தகவல்களுமே ரொம்ப சுவாரஸ்யமா இருந்தன.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

ஒரு உதாரணம் சொல்லணும்னா, கருணாநிதியே வசனம் எழுத மூணாவது ஆளாத்தான் உள்ளே வந்திருக்கார்.

முதலில் பாவலர் பாலசுந்தரம் வசனம் எழுதினார். அது செட் ஆகாமல் திருவாரூர் தங்கராசு எழுதினார். அதுவும் திருப்தி இல்லாததால் மூன்றாவது ஆளாகத்தான் கருணாநிதி வந்தார்

ஆர்வத்துல தொடங்கின ஒரு விஷயம். இவ்வளவு பக்கங்கள் வரும்னு நானே எதிர்பார்க்கலை. சினிமா இண்டஸ்ட்ரியில் இளம் இயக்குநர் ஓருவர் வாசிட்டு, ரொம்ப இண்ட்ரஸ்ட்டா இருக்குனு சொன்னார்.

வாசிக்கிறவர்களிடமிருந்து இப்படியான வார்த்தைகள் வரும் போது புத்தகம் உருவானதின் நோக்கம் நிறைவேறி விடுகிறது’’ என்கிறார் இவர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.