`அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை' – மோடி குறித்து கேள்வி; இங்கிலாந்து டாக்டருக்கு நிகழ்ந்தது என்ன?

இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சங்க்ராம் பாட்டீல் யூடியூப்பராகவும் இருக்கிறார். அதிக அளவில் யூடியூப்பிலும், பேஸ்புக்கிலும் வீடியோ பகிர்ந்துள்ளார்.

அவர் கடந்த மாதம் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குறித்த உலகளாவிய விவாதங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அவரது ஆதரவாளர்களிடமிருந்தும், ஆளும் தரப்பிடமிருந்தும் விளக்கத்தைக் கோரியிருந்தார்.

இருப்பினும், டாக்டர் சங்க்ராம் பாட்டீலுக்கு தெரியாமலேயே இது குறித்து நரேந்திர மோடியின் ஆதரவாளர் ஒருவர் கடந்த மாதம் 18ம் தேதி சங்க்ராம் பாட்டீலுக்கு எதிராக போலீஸில் புகார் செய்து இருந்தார். அதன் அடிப்படையில் டாக்டருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விமான நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது.

இங்கிலாந்தில் இருந்து 3 அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை டாக்டர் தனது பெற்றோரை பார்க்க இந்தியா வருவதுண்டு.

விமான நிலையத்தில் கைது

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் இருந்து தனது மனைவியோடு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தவுடன் அவரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் உங்களுக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், போலீஸார் வந்து விசாரித்து உங்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர்.

இது குறித்து சங்க்ராம் பாட்டீல் கூறுகையில், ”என்னை விமான நிலையத்தில் 5 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். அதன் பிறகு லோயர் பரேல் குற்றப்பிரிவு போலீஸார் வந்து என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர். என்னிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு என்னை விடுவித்தனர். மொத்தம் 15 மணி நேரம் என்னை பிடித்து வைத்திருந்தனர். எனக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுத்து இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். இது குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் வந்திருப்பேன்.

எனது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகுதான் பாஸ்போர்ட்டை கொடுத்தார்கள். இரு சமூகங்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

என் பதிவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் எதுவும் இல்லை. பிரதமரைப் பற்றி ஏன் இப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன, ஏன் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றுதான் கேட்டேன்.

இந்தக் கைது நடவடிக்கையால் எங்களின் பயண திட்டம் சீர்குலைந்தது. எனது மனைவி தனது பெற்றோரைப் பார்க்க நாக்பூருக்குச் செல்லவிருந்த இணைப்பு விமானத்தைத் தவறவிட்டார். ஜல்காவில் விவசாயிகளாக இருக்கும், 70 வயதை கடந்த எனது பெற்றோர் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நான் இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்லாமல், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக போராட்டம்

2011-ல் மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராகச் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையேற்று நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கொரோனா காலத்தின்போது மருத்துவர்களையும் நான் கேள்வி கேட்டுள்ளேன். கேள்வி கேட்பது எனது சமூக ஊடகச் செயல்பாட்டின் ஒரு பகுதி. அது எனது ஜனநாயக உரிமை. எனது நோக்கம் ஒருபோதும் அரசாங்கத்தை குறிவைப்பது கிடையாது. மாறாக பிரதமர் குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் குறித்துத் தெளிவு பெறுவதே ஆகும்.

நான் அரசாங்கத்திற்கு எதிராக அல்லாமல், பிரதமர் மோடியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவே கேள்விகளை எழுப்பினேன். உலக அளவில் பிரதமரின் பிம்பம் மற்றும் குணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அது நாட்டிற்கு நன்மை பயக்கும்,” என்று டாக்டர் பாட்டீல் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.