ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ள மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 17-வது நாளாக இன்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனினும், உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு இறுதியானது என டிரம்ப் கூறினார். இதற்கு சீனா நேரிடையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை குறிப்பிட்டு, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு பகுதியில் தற்போதுள்ள நிலைமை மற்றும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால், பேரிடரை எதிர்கொள்ள கூடிய விளைவுகளை பற்றியும் அமெரிக்கா அறிந்திருக்க வேண்டும். ஈரான் மீது புதிதாக ராணுவ தாக்குதல்களை நடத்துவோம் என மிரட்டல் விடுப்பது ஏற்று கொள்ள முடியாதது. ஈரானின் உள்நாட்டு அரசியலில், வெளிநாட்டு தலையீடு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஈரானில், 2 வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சூழலில், நீங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள். உங்களுக்கு உதவி வந்து கொண்டிருக்கிறது என டிரம்ப் உறுதியாக கூறினார்.

எனினும், ஈரான் பாதுகாப்பு மந்திரி அஜீஸ் நசீர்ஜதே கூறும்போது, எங்களுக்கு எதிரான எந்தவித தாக்குதலுக்கும் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம். எங்களை யாரும் மிரட்டுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த பகுதியிலுள்ள அமெரிக்காவின் அனைத்து படை தளங்களையும் தாக்குவோம் என்றும் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.