Parasakthi: "அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க!" – கலங்கும் 'பராசக்தி' அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ கடந்த வாரம் திரைக்கு வந்தது.

மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள்.

முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி, சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியவர்களும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

பராசக்தி
பராசக்தி

அப்படி படத்தில் அய்யாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கஜேந்திரன் நம் இதயங்களை கனக்க வைத்திருந்தார்.

‘சில் பண்ணு மாப்பி’ யூட்யூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான இவரிடம் ‘பராசக்தி’ அனுபவங்களைக் கேட்டறிந்தோம்.

இந்த வாய்ப்பு மிக முக்கியமானது

நம்மிடையே பேசிய கஜேந்திரன், “நான் சில படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சிருக்கேன். எஸ்.கே சார்கூட ‘டான்’ படத்திலும் கம்பெனி ஆர்டிஸ்டாக வருவேன். அதுபோல, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘பேட்ட’ மாதிரியான படங்களிலும் பேக்ரவுண்ட்ல நிப்பேன்.

‘பராசக்தி’ வாய்ப்புக்காக நான் மூணு வருஷமாக முயற்சி செய்திட்டிருந்தேன். இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் படக்குழுவிடம் ஆடிஷன் கொடுத்திருந்தேன்.

இந்தப் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தபோது மறுபடியும் ஆடிஷன் பண்ணினேன். சுதா மேமுக்கும் நான் அய்யா கண்ணு கேரக்டருக்கு பொருந்திப் போவேன்னு தோணியிருக்கு. பிறகு நான் அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப தயாராகிற வேலைகள்ல இறங்கிட்டேன்.

Gajendran - Parasakthi
Gajendran – Parasakthi

முகம் கொஞ்சம் கருப்பாக மாறணும்னுங்கிறதுக்காக தினமும் சில விஷயங்கள் பாலோவ் பண்ணினேன். இத்தனை வருடம் பெருங்கனவோடு சுற்றி வந்த எனக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியமானது.

அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. அதை இறுக்கமாகப் பிடிச்சு முன்னேறணும்னு யோசிச்சேன். முழுமையாக தயார்ப்படுத்திக்கிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிட்டேன்.

படப்பிடிப்புக்காக இலங்கை கிளம்பும்போதும், சுதா மேம் என்னைக் கூப்பிட்டு பேசினாங்க. நான் அந்தக் கேரக்டருக்கு சரியாக இருப்பேன். அவங்க நினைச்சதை செய்திடுவேன்னு நம்பினாங்க.

அப்படிதான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். நான் யூட்யூப்ல ‘சில் பண்ணு மாப்பி’ சேனல்ல கடந்த சில வருஷங்களாக வீடியோ பண்ணிட்டு வர்றேன். சினிமானு வரும்போது நான் கவனிக்கப்படாமல் போயிடுவேனோன்னு எண்ணங்கள் என்னை உறுத்திட்டு இருந்துச்சு.

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய அம்மா தவறிட்டாங்க. படம் வெளிவந்த பிறகும் நான் போய் படம் பார்க்கல. ஆனா, நண்பர்கள் பார்த்துட்டு வந்து எனக்கு பாராட்டுகள் தெரிவிச்சாங்க.

படப்பிடிப்பு தளத்திலும் நான் நல்லா நடிச்சிருந்தேன்னு பாராட்டினாங்க. பயத்துடனேயே இருந்த எனக்கு படப்பிடிப்பு தளத்துல பெரிய பெரிய கலைஞர்களெல்லாம் கொடுத்த பாராட்டுதான் தெம்பூட்டி நடிக்க வச்சது.

Gajendran - Parasakthi
Gajendran – Parasakthi

அந்தக் காட்சியில நான் நடிச்சு முடிச்சதும் படக்குழுவினர் கைதட்டினாங்க. எஸ். கே சாரும் தனியாகக் கூப்பிட்டு பாராட்டினாரு. படம் வெளியானதும் நண்பர்கள் எனக்கு விஷ் செய்ததுக்குப் பிறகுதான் நான் படம் பார்க்கப் போனேன்.

‘பராசக்தி’ படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்னு விரும்பினேன். இப்போ அது நடக்கலைனாலும் பரவாயில்ல. ஏன்னா, இப்போ கிடைச்சிட்டு இருக்கிற பாராட்டுகளை என்னுடைய லைஃப் டைம் மெமரியாக வச்சு கொண்டாடுவேன்!” என்றார் நம்பிக்கையுடன்.

மேலும் பேசியவர், “ஒரேயொரு வருத்தம்தான். அம்மா என்னை திரையில பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. நான் நடிச்ச வீடியோக்களை டிவியில போட்டு காண்பிக்கச் சொல்வாங்க.

ஆனா, படம் வந்தால் தியேட்டருக்குக் கூப்பிட்டுப் போய் காட்டுவோம்னு நினைச்சேன். இதுக்கு முன்னாடி சதீஷ் சாரோட ‘வித்தைக்காரன்’ படத்திலும் நான் நடிச்சிருந்தேன்.

பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி அறிவிச்சதும், ‘நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்’னு சொன்னேன்.

ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு!” என மெளனம் ஆனவர், “இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன்.

இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன். எஸ்.கே சார்கிட்ட ‘நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்’னு சொன்னேன்.

Gajendran - Parasakthi
Gajendran – Parasakthi

அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு. என்னுடைய கேரக்டருக்கு நானேதான் டப்பிங்கும் செய்திருந்தேன். முதல்ல கொஞ்சம் திக்குனேன்.

உடனே சுதா மேம்கிட்ட ‘சாரி மேம். இனி சரியாகப் பண்ணிடுறேன்’னு சொன்னேன். ‘சாரி வேண்டாம்ங்க. இதை கச்சிதமாகப் பேசுங்க, போதும்’னு ரொம்ப சாஃப்டாக சொல்லி என்னை பேச வச்சாங்க.” என்றார்.

“நான் யூட்யூப்ல இத்தனை வருஷமாக நடிச்சிட்டு வர்றேன். ஆனா, அதன் மூலம் எனக்கு வாய்ப்புகள் பெரியளவுல வரலைங்கிறதுதான் உண்மை.” என்றவரிடம், “யூட்யூபில் உங்களின் முகம் பரிச்சயமானதாச்சே! அதிலிருந்து வாய்ப்புகள் வரவில்லையா?” எனக் கேட்டதும், “நீங்க கேட்கிற மாதிரிதான் ப்ரோ எல்லோரும் என்கிட்ட கேட்கிறாங்க.

ஆனா, இல்லைங்கிறதுதான் உண்மை. ஆடிஷன் மூலமாக வாய்ப்புகள் தொடர்ந்து தேடிட்டு இருக்கேன்.

அதுவும் சில சமயங்கள்ல கடைசி நேரத்துல கிடைக்காமல் போயிடுது. இனி அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சிட முழுமையாக முயற்சி பண்ணுவேன்!” என பாசிட்டிவிட்டியுடன் பேசி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.