படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், ஜானர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரவி மோகன், இந்தாண்டும் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கிறார். இப்போது நடிப்போடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் கூடுதல் புரொமோஷனாக இயக்குநராகவும் ஸ்கோர் செய்ய ரெடியாகி வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக அசத்தியதில், வரவேற்பை அள்ளிய மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவி. அடுத்து ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’ கார்த்திக் யோகியின் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என அடுத்தடுத்து லைன் அப்களை வைத்துள்ளார்.
அதில் ‘கராத்தே பாபு’வின் படத்தை ‘டாடா’ கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். அரசியல் ஜானர் இது. ரவியின் ஜோடியாக புதுமுகம் தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், கே.எஸ்.ரவிக்குமார் என பலரும் நடித்து வருகிறார்கள்.
கணேஷ் கே.பாபுவுடன் இணைந்து வசனங்களை இயக்குநர் ரத்னகுமார், பாக்யம் சங்கர் ஆகியோரும் சேர்ந்து எழுதியுள்ளனர். படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போது படத்திற்கான சட்டசபை செட் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதாக பாராட்டை பெற்றது.
அதன் பிறகு படத்தை பற்றிய எந்த தகவல்களும் வரவில்லை. ‘பராசக்தி’ வெளியாகி விட்டதால் ரவிக்கு அடுத்து திரைக்கு வரும் படமாக ‘கராத்தே பாபு’ உள்ளது. இதன் டீசரை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார் ரவி. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கி கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோ கோடு’ என்ற படத்தை தயாரித்து நடிப்பதாக அறிவித்தார்.
இந்த படத்தில் ரவியுடன் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன், ஷ்ரத்தா ச்ரீநாத், ச்ரி கௌரிப் ப்ரியா, யோகிபாபு என பலரும் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் சிக்கலில் இருப்பதால், இப்போது வேறு டைட்டிலை பரிசீலீத்து வருகிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் கிளம்புகிறார்கள். ‘கில்லர்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு பின் ஓய்வில் இருந்து வரும் எஸ்.ஜே.சூர்யா, உடல்நலன் சரியானது இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் சொல்கிறார்கள்.

அதைப் போல ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தீவிரமாக எழுதி வருகிறார் ரவி மோகன். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘கோமாளி’ படத்தில் ரவியும், யோகி பாபுவும் இணைந்து நடித்த சமயத்திலேயே இந்த படத்திற்கான கதையை சொல்லி விட்டார். யோகிபாபுவும் அதைக் கேட்டுவிட்டு நெகிழ்ந்ததுடன் ‘எப்போ ஷூட்னாலும் உடனே தேதிகள் தர்றேன்’ என வாக்குறுதி கொடுத்துவிட்டார். இப்போது ‘ப்ரோ கோட்’ படப்பிடிப்பிற்கிடையே யோகி பாபுவின் படப்பிடிப்பையும் தொடங்கி விட திட்டமிட்டு வருகிறார் ரவி.
இதற்கிடையே ‘ஜீனி’ என்ற ஃபேன்டஸி படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். மிஷ்கினின் சீடர் அர்ஜூனன் இயக்கி வருகிறார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிகா கபி என பலரும் இதில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து ‘மிருதன்’ படத்தின் பார்ட் 2வில் நடிப்பார் என்ற பேச்சும் இருக்கிறது.!