புதுடெல்லி,
ராஜஸ்தானில், மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரணை நடத்தவும், வழக்கு பதிவு செய்யவும் முழு அதிகாரம் உள்ளது’ என தீர்ப்பளித்தது.
ராஜஸ்தான் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு ஊழியர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், “ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக சிபிஐயிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.