இந்தியா கிரிக்கெட் அணி டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும், ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதற்கு சுப்மன் கில்லின் கேப்டன்சி தான் முக்கிய காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கோரிக்கை வைத்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் உலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
Add Zee News as a Preferred Source

தோல்விகள் சர்ச்சை
கடந்தாண்டு ரோகித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். 2027 வரை ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியானதால் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இழந்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் சொந்த மண்ணில் இழந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடையும் முதல் தொடர் இதுவாகும். இதனால் சுப்மன் கில்லை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.
ரோகி தான் பெஸ்ட்
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பேட்டி அளித்துள்ள முன்னால் இந்திய வீரர் மனோஜ் திவாரி, “பிசிசிஐ தனது தவறை திருப்பிக் கொள்ள இதுவே சரியான நேரம். 2027 உலக கோப்பைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் மீண்டும் ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி கொடுப்பது நல்லது. இது வெறும் சாதாரண இரு தரப்பு தொடர் பற்றிய தோல்வி மட்டும் இல்லை, உலகக்கோப்பை வெல்வது பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் முடிவுகள் மாறி இருக்கும். ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சியை ஏன் பறித்தீர்கள் என்று தெரியவில்லை. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது அணி சரியான திசையில் சென்று கொண்டிருந்தது. தற்போது உள்ள சுப்மன் கில்லை விட ரோகித் சர்மா பல மடங்கு சிறந்தவர். அதனால் தான் அவர் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்” என்று திவாரி தெரிவித்துள்ளார்.

வெற்றி யாருக்கு?
உலக கோப்பையை பற்றி பேசிய திவாரி, “சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லாது என்று நான் சொல்லவில்லை. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஒப்பிட்டு பார்க்கையில் ரோகித் சர்மா சிறந்தவராக இருக்கிறார் என்று சொல்கிறேன். இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு 85 முதல் 90% வரை வாய்ப்புள்ளது. ஆனால் சுப்மன் கில் தலைமையில் அது உறுதியாக இல்லை” என்று தெரிவித்துள்ளார். எனவே பிசிசிஐ உடனடியாக தலையிட்டு 2027 உலக கோப்பையை மனதில் வைத்து மீண்டும் ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியை கொடுக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark