இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ஓவர்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் சில வருத்தத்திற்குரிய சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சமீபத்திய ஃபார்ம் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. காரணம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றியுள்ளார். இது அவரது இடத்தை கேள்விக்குறியாகி உள்ளது.
Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சன் ரன்கள்
ராய்ப்பூரில் நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 209 என்ற இமாலய இலக்கை எதிர்த்து களம் இறங்கியது. பொதுவாக பெரிய இலக்கை எதிர்த்து ஆடும் போது ஓப்பனர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பவுண்டரி லைனில் கான்வே தவறவிட்ட கேட்சை பயன்படுத்திக் கொள்ள முடியாமல், முதல் ஓவரிலேயே ஆறு ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார் சஞ்சு சாம்சன். பின்பு இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
கிடைத்த வாய்ப்பை தவறவிட்டிட்ட சஞ்சு சாம்சன்!
கடந்த சில தொடர்களாக சுப்மன் கில் தான் ஓப்பனிங் வீரராக களம் இறங்கி வந்தார். சில போட்டிகளில் சஞ்சு சாம்சன் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். மேலும் ஒரு சில போட்டிகளில் பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை. இந்நிலையில் டி20 உலக கோப்பையில் இருந்து சுப்மன் கில்லை நீக்கி மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பை அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் தற்போது நியூசிலாந்து தொடரில் ஏமாற்றம் அளித்து வருகிறார்.

நியூசிலாந்து தொடர்
நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார் சஞ்சு சாம்சன். தற்போது இரண்டாவது டி20 போட்டியில் 6 ரன்களில் வெளியேறி உள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த சொதப்பலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கோபம் அடைந்து வருகின்றனர். சஞ்சு சாம்சனிற்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகிறது. இந்த விமர்சனங்களை போக்க சஞ்சு சாம்சன் நாளை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் கண்டிப்பாக ரன் அடித்தே ஆக வேண்டும்.
அப்படி அடிக்காத பட்சத்தில் நான்காவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறி உள்ள திலக் வர்மா அணிக்குள் வந்துவிடுவார். ஏற்கனவே இசான் கிசான் அதிரடி பார்மில் இருக்கும் நிலையில் வேறு வழியில்லாமல் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். முதலில் இஷான் கிஷன் தான் பெஞ்ச் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் அவர் காட்டிய அதிரடியின் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் எதிர்காலம் அவரது கையில் தான் தற்போது உள்ளது.
About the Author
RK Spark