India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (ICC T20 World Cup 2026) தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாள்களே டி20 உலகக் கோப்பை தொடருக்கு உள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணிக்கு (Team India) வரும் ஜனவரி 31ஆம் தேதிவரை நியூசிலாந்து டி20ஐ தொடர் உள்ளது. அதன்பின் 6 நாள்கள் ரெஸ்ட். கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணி ஒருமுறை கூட டி20ஐ தொடரை இழக்கவில்லை. உள்நாட்டில் மட்டும் 11 டி20ஐ தொடர்களை தொடர்ந்து இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்திய அணி பலமாக தென்படும் நிலையில், சில வீரர்கள் காயமடைந்தது மட்டும் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கில், ஜித்தேஷ் அதிரடி நீக்கம்
கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்பட்டனர். கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்கா டி20ஐ தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட சுப்மான் கில் அதிரடியாக ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டார். பின்வரிசையில் விளையாடும் விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மாவின் வாய்ப்பும் பறிபோனது.
இஷான் கிஷன், ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு
அதற்கு பதில் டாப் ஆர்டரில் விளையாடும் விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு திட்டமிட்டது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் ரிங்கு சிங். ஜித்தேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வந்தாலும், பினிஷர் ரோலில் ரிங்கு சிங் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்பதற்காகவும், டாப் ஆர்டரில் பிரச்னை தீர வேண்டும் என்பதற்காகவும் இந்த வியூகம் வகுக்கப்பட்டது.
மொத்தம் 3 பேருக்கு காயம்
தொடர்ந்து, விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வந்தபோது திலக் வர்மாவுக்கு (Tilak Varma) திடீர் வயிற்று வலி வந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரும் உடல்தகுதியை மேம்படுத்தி வருகிறார். அடுத்து நியூசிலாந்து ஓடிஐ தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு (Washington Sundar) நெஞ்செலும்பு பகுதியில் காயம ஏற்பபட்டது. இதனால் அவரும் நியூசிலாந்துக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் இருந்து விலகி, காயத்தில் இருந்து மீண்டுவர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முதல் டி20ஐ போட்டியில் அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டது. அவரும் அதற்கு பிறகு 2 போட்டிகளில் விளையாடவில்லை.
பிஷ்னோய், இஷான் மிரட்டல்
இதில் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதில் முறையே ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) ஆகியோருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை. ஏற்கெனவே இந்திய அணி ஸ்குவாடில் இருக்கும் இஷான் கிஷன்தான் (Ishan Kishan), திலக் வர்மா இடத்தில் விளையாடினார். ரவி பிஷ்னோய்க்கு நேற்றைய போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் அதன் முதல் போட்டியில் அமெரிக்கா அணியை பிப்ரவரி 7ஆம் தேதி அன்று மும்பையில் எதிர்கொள்கிறது. அந்க வகையில், அக்சர் பட்டேல், டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் பங்கேற்பார் என தகவல்கள் வெளிவந்திருக்கும் சூழலில், மற்ற இரண்டு வீரர்களின் நிலை என்ன? என்ற கேள்வியும் இந்திய அணி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
திலக் வர்மா
முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டி20ஐ போட்டிகளில் இருந்து மட்டும் திலக் வர்மா விலகுகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் நியூசிலாந்து தொடரை முற்றிலும் தவறவிடுவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் மும்பையில் பயிற்சி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்திற்கு முன்பு, அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி திலக் வர்மா இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து டி20ஐ தொடர் முழுவதையும் தவறவிடுவார் என கூறப்பட்டது. அதேபோல், டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு அவருக்கு இன்னும் ஓய்வு தேவை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலில், “அவர் முழுமையாக உடல் தகுதி பெற இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். அவர் அணியில் தொடர்வாரா அல்லது மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து தேர்வுக் குழுவும் அணி நிர்வாகமும் முடிவெடுக்கும்” என கூறப்படுகிறது. இதனால், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரவி பிஷ்னோய் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | இந்த 2 வீரர்களுக்கு ஆப்பு… டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இனி வாய்ப்பில்லை!
மேலும் படிக்க | காலியான சஞ்சு சாம்சன் இடம்! உலக கோப்பைக்கு முன்பே மாற்றப்படுவாரா?
மேலும் படிக்க | அபிஷேக் – SKY வெறியாட்டம்… நொறுங்கிய நியூசிலாந்து – இந்தியா சாதனை வெற்றி
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More