கடைசி நிமிடத்தில் சொதப்பும் பாகிஸ்தான்! டி20 உலக கோப்பையில் இல்லை?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை அடுத்த மாதம் தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. காரணம் பங்களாதேஷ் இந்த தொடரில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக வேறொரு அணியை ஐசிசி கடைசி நிமிடத்தில் சேர்த்துள்ளது. இந்தியாவில் எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் இந்த மாற்றங்களை செய்ய முடியாது என்பதால் ஐசிசி இதனை நிராகரித்தது. இதனால் பங்களாதேஸ் அணி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

pcb

பாகிஸ்தான் எதிர்ப்பு 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை புறக்கணிக்க போகிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. இது குறித்து இறுதி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வரையும் விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஐசிசி, இந்தியா, பங்களாதேஷ் தொடர்பான பிரச்சனைகளை முழுவதும் விவரித்துள்ளார். டி20 உலக கோப்பைக்கு முன்பு இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோஷின் நக்வி, டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து இந்த வார இறுதிக்குள் அல்லது அடுத்த வாரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் வழிகாட்டுதலை நாங்கள் முழுவதும் பின்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தியா vs பாகிஸ்தான் 

ஐசிசி உடன் நடந்த விவாதத்தில் பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இதன் காரணமாக வங்கதேசத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி உடன் தொடர் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. ஒரு வேலை உலக கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால், அது அவர்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். மேலும் ஐசிசி அவர்களுக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. மற்ற அணிகளுடன் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பது, வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்கு தடை விதிப்பது போன்றவற்றை ஐசிசி கொண்டு வரும். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். இதனை மனதில் வைத்து பாகிஸ்தான் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

சாம்பியன்ஸ் டிராபியில் சர்ச்சை 

பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டோம் என்று சொன்னது போல, பாகிஸ்தான் அணி ஏற்கனவே தெரிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்தியா பயணம் செய்ய மறுத்தது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. அதே பாணியை தற்போது பாகிஸ்தான் கடை பிடித்துள்ளது. மேலும் முழு தொடரையும் புறக்கணிக்காமல், பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மட்டும் பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் நேற்று டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.