அஜித் பவார் மரணம்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு:-

விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்ளிட்ட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி:-

மராட்டிய மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார். கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பை கொண்டிருந்தார். கடின உழைப்பாளியாகவும், மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஆளுமையாகவும் அவர் மதிக்கப்பட்டார். அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா:-

துயர விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த மூன்றரை தசாப்தங்களாக மராட்டியத்தின் ஒவ்வொரு பிரிவின் நலனுக்காகவும் அஜித் பவார் அர்ப்பணித்த அர்ப்பணிப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், மராட்டிய மக்களின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் நீண்ட விவாதங்களை நடத்துவார்.

அவரது மறைவு எனக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட இழப்பாகும். பவார் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில், முழு தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அவரை இழந்து வாடும் பவார் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. மறைந்த அஜித் பவாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்:-

அஜித் பவாரின் அகால மரணம் குறித்து அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது நீண்ட பொது வாழ்வில், அவர் மராட்டியத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-

விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயர விபத்தை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்:-

இந்திய அளவில் நமது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டு அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை:-

விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் அவர்களின் துயர மரணத்தால் நான் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். பாராமதி தொகுதியிலிருந்து 8 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒரு அனுபவமிக்க நிர்வாகி மற்றும் மராட்டியத்தின் பொது சேவைக்கும் நலனுக்கும் தனது வாழ்வின் பல தசாப்தங்களை அர்ப்பணித்த ஒரு முக்கிய தலைவர் ஆவார். அவரது திடீர் மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பாகும்.

இந்தத் துயர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், துயரத்தில் வாடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.