அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.
மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்கா – இந்தியா ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எம்.பி.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வழங்கியிருக்கும் ஒத்திவைப்பு தீர்மான மனுவில், “முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன். அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரதமர் தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்
அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், மறுபுறம், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியையும் விதிக்காது மற்றும் அதன் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும். மேலும், இந்தியா அமெரிக்காவுடனான அதன் வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்களால் அதிகரிக்க வேண்டும்.
ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்து கொண்டுள்ளது என்று அர்த்தம். ட்ரம்பின் அறிக்கை, பிரதமர் நமது தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் வலைதளப்பதிவில், அவர் அமெரிக்க வரி குறைப்பை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் வரி குறைப்பு பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதிகள் பற்றிய உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஈரானை அடிபணியவைக்க ட்ரம்ப் படைகளை குவித்தார். இந்திய பிரதமரை அடிபணிய வைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் ட்ரம்புடன் தான் விவாதித்ததை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.