ஒரு சிக்ஸர் கூட அடிக்காத இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் – சுவாரஸ்ய தகவல்

Cricket Records : கிரிக்கெட் என்றாலே மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறப்பதையும், சிக்ஸர் மழையில் ரசிகர்கள் நனைவதையும் தான் நாம் பார்த்திருக்கிறோம். யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையை இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த மூன்று முக்கியமான பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கில் ஒரு விசித்திரமான சாதனைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். அவர்கள் தாங்கள் விளையாடிய சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரே ஒரு சிக்ஸர் கூட அடித்தது இல்லை.  அவர்கள் யார் என்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

1. யுஸ்வேந்திர சாஹல் :

இந்திய அணியின் முன்னணி லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால், தனது சுழற்பந்து வீச்சால் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களைக் கூட நிலைகுலையச் செய்தவர். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் தவறாமல் இடம்பிடித்த இவர் அண்மைக்காலமாக இந்திய அணியில் சேர்க்கப்படுவதில்லை. இவர் தான் விளையாடிய சர்வதேச போட்டிகளில் பேட்டிங்கில் ஒரே ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. 

2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஹால் இதுவரை 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 217 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. மேலும், இவ்வளவு அனுபவம் இருந்தும், சாஹலுக்கு இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. குல்தீப் யாதவ்:

இந்திய அணியின் ‘சைனாமேன்’ ஸ்பின்னர் குல்தீப் யாதவ். தற்போது அணியின் தவிர்க்க முடியாத பவுலராக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கூட விக்கெட்டுகளை அள்ளும் இவருக்கு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிக்ஸர் அடிப்பது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப், பந்துவீச்சில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்திருந்தாலும், வெள்ளைப்பந்து பார்மேட்டான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இவரின் பேட்டில் பட்ட பந்துகள் ஒன்றூ கூட சிக்ஸருக்கு செல்லவில்லை.

3. இஷாந்த் சர்மா

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்களில் ஒருவரான இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலிய மண்ணில் ரிக்கி பாண்டிங்கையே திணறடித்தவர். நீண்ட காலமாக இந்திய அணியின் தூணாக விளங்கிய இவருக்கும் சிக்ஸர் கணக்கு மிகவும் சுமார்தான். இஷாந்த் சர்மா 105 டெஸ்ட், 80 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கேரியரில் இஷாந்த் ஒரு சிக்ஸர் கூட அடித்ததில்லை. 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த், அந்த ஃபார்மேட்டில் ஒரே ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

இந்த மூன்று வீரர்களும் பேட்டிங்கில் சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும், பந்துவீச்சில் இந்திய அணிக்கு பல வரலாற்று வெற்றிகளைத் தேடித்தந்துள்ளனர். கிரிக்கெட்டில் ரன் குவிப்பது மட்டுமே சாதனை அல்ல, ரன்களைக் கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் கூட மிகப்பெரிய கலைதான் என்பதற்கு இவர்களே சாட்சி.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.