ICC T20 World Cup 2026, India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தொடங்கி சுமார் ஒரு வாரக்காலம் ஆகிவிட்டது. குரூப் சுற்று போட்டிகள் ஒவ்வொன்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகின்றன.
Add Zee News as a Preferred Source
அடுத்து பரபரப்பான சூப்பர் 8 சுற்று
மார்ச் 8ஆம் தேதி இறுதிப்போட்டி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் பிப். 20ஆம் தேதிவரை குரூப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதாவது, இந்த வாரத்துடன் குரூப் சுற்று போட்டிகள் முடிந்துவிடும். பிப். 21ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் சூப்பர் 8 சுற்று தொடங்கிவிடும். மார்ச் 1ஆம் தேதிவரை சூப்பர் 8 போட்டிகள் நடைபெறும், பிப். 4, பிப். 5 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இன்னொரு இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பு?
இந்த தொடரில் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் போட்டி என்றால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல்தான். இப்போட்டி நாளை (பிப். 15) இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் குரூப் 8 சுற்றில் மோதிக்கொள்ளாது. அதேநேரத்தில், அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் ஓரளவு இருக்கிறது. ஒருவேளை அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதாமல், இறுதிப்போட்டியில் இரு அணிகளும் விளையாடவும் வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றில் இன்னொரு முறை இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி
இதுவரை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8 முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுள்ளது. அதில் இந்தியா 6 முறையும், பாகிஸ்தான் 1 முறையும் வென்றுள்ளன. அதேநேரத்தில், 2007 டி20 உலகக் கோப்பை போட்டி சமனில் முடிந்த நிலையில், பவுல்-அவுட் முறையில் இந்தியா வெற்றிபெற்றது. 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த போட்டியில்தான் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் கடுமையான தோல்வியை பதிவு செய்தது.
பலமாக இருக்கிறதா பாகிஸ்தான்…?
இது ஒருபுறம் இருக்க, தற்போதைய சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலம் பெற்ற அணியாக திகழ்கிறது. கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதி, அதில் மூன்றிலுமே இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது. ஆனால், அதன்பின் இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆட்டமும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. பிரேமதாசா மைதானத்தில் தற்போதைய இந்திய அணி விளையாடியதில்லை. ஒப்பீட்டளவில் பெரிய மைதானமான அங்கு இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு சாதகங்கள் அதிகம் இருக்கின்றன. இந்தச் சூழலில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் மூன்று பெரிய பிரச்னைகள் குறித்து இங்கு காணலாம்.
பிளேயிங் லெவன் பிரச்னை
பாகிஸ்தான் அணி 4-5 சுழற்பந்துவீச்சு ஆப்ஷனுடன் வரும். ஏறத்தாழ 13-15 ஓவர்களை சுழற்பந்துவீசி இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை சீர்குலைக்க வியூகம் வகுக்க வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், இந்திய அணியின் எதிர் வியூகம் என்னவாகும் இருக்கும், பிளேயிங் லெவன் காம்பினேஷனில் என்னென்ன மாற்றங்களை இந்திய அணி செய்ய இருக்கிறது போன்ற கேள்விகள் சூர்யகுமார் – கம்பீர் ஜோடியை நோக்கி எழுகின்றன. தற்போதைய சூழலில், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர்தான் முதன்மையான சுழற்பந்துவீச்சாளர்களாக அணியில் உள்ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் பார்ட்-டைம் ஸ்பின்னர்கள்தான். இவர்களை நம்பி இந்திய களமிறங்கும் வாய்ப்பு குறைவு.
எனவே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இருவரை அல்லது இதில் ஒருவரை பிளேயிங் லெவனில் கொண்டுவர இந்தியா திட்டமிடும். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் ஆப்ஷனையும் அளிப்பார் என்பதால் ரிங்கு சிஙகிற்கு பதில் வாஷிங்டன் சுந்தர் உள்ளே கொண்டுவரப்படலாம். குல்தீப் யாதவ் மட்டும் உள்ளே வரும்பட்சத்தில் கண்டிப்பாக அர்ஷ்தீப் சிங்கை வெளியே அமரவைக்க வேண்டும். ஹர்ஷித் ராணா இல்லாத காரணத்தால், புது பந்திலும், டெத் ஓவர்களிலும் அட்டாக் செய்யக்கூடிய பேட்டிங் செய்யும் திறன்கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை. ஹர்திக் பாண்டியா நிச்சயம் புதிய பந்தில் கலக்குவார், ஆனால் டெத் பௌலிங்கில் பும்ராவையே நம்பியிருக்க வேண்டும். இந்தச் சூழலில் பிளேயிங் லெவனில் யாரை அமரவைத்து, யார் யாரை உள்ளே கொண்டுவரப்போகிறார்கள் என்பது இந்திய அணிக்கு பெரும் பிரச்னை.
அபிஷேக் சர்மா தலைவலி
அபிஷேக் சர்மா வயிற்றில் தொற்று ஏற்பட்டு சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த போட்டியில் கூட அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. தற்போது இந்திய அணியுடன் கொழும்புவுக்கு பயணம் செய்திருக்கிறார். பாகிஸ்தான் போட்டியில் அவர் விளையாடுவது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு பின்னணியில் அபிஷேக் சர்மாவின் பங்கு அளப்பரியது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் முறையே 31(13), 74(39), 5(6) என அபிஷேக் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்டுத்தி உள்ளார்.
கடந்த நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதில் ஓபனிங்கில் இறங்கிய சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி என 22 ரன்களை எடுத்திருந்தார். நமீபியா அணிக்கு எதிராக கூட நீண்ட இன்னிங்ஸை சஞ்சு சாம்சனால் விளையாட இயலவில்லை. கடந்த ஜனவரியில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரிலும் சஞ்சு சாம்சன் பெரியளவில் ரன்களை எடுக்காமல் மோசமான பார்மில் இருந்தார். டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் சாம்சனுக்கு இடமே கிடைக்கவில்லை. அபிஷேக் காயம் காரணமாக மட்டுமே சாம்சன் விளையாடினார். சாம்சன் ஒருவேளை சிறப்பான தொடக்கத்தை நாளையும் கொடுக்க தவறும்பட்சத்தில், இந்திய அணிக்கு தொடக்கக் கட்ட ஓவர்களில் கடும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பிரேமதாசா போன்ற பெரிய மைதானங்களில் பவர்பிளேவில் அதிகளவில் ரன்களை குவிப்பது இன்றியமையாததாகும். எனவே, அபிஷேக் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாகிவிடும்.
உஸ்மான் தாரிக் பிரச்னை
தற்போது திரும்பிய பக்கமெல்லாம், உஸ்மான் தாரிக்கை பற்றிதான் பேச்சு. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 2025 சீசனில் 10 இன்னிங்ஸில் 20 விக்கெட்டை வீழ்த்தி பெரும் கவனத்தை ஈர்த்தார். ‘வினோதமான’ முறையில் ஸ்லிங் ஆக்சனில் பந்துவீசும் உஸ்மான் தாரிக்கை பேட்டர்களால் பெரியளவில் கணிக்கவே முடியவில்லை. பந்தை கையில் இருந்து ரிலீஸ் செய்வதற்கு முன் இவர் ஓரிரு நொடிகள் சட்டென நின்று, பின்னர் பந்துவீசுவது பேட்டர்களின் ரிதமை சீர்குலைக்கும் விதமாக உள்ளன. இந்திய அணி நடப்பு தொடரில் அமெரிக்காவுக்கு எதிராகவும் சரி, நமீபியா அணிக்கு எதிராகவும் சரி சுழற்பந்துவீச்சை அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.
எனவே, பிரேமதாசா மைதானத்தில் உஸ்மான் தாரிக்கை இந்திய அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடத்திலும் உள்ளது. உஸ்மான் தாரிக்கின் மெதுவான பந்துவீச்சை அதிக பவர் கொண்டு அடிக்க ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்றாலும் இவரை கவனமாக விளையாட வேண்டிய கட்டாயமும் உள்ளது. அழுத்தம் நிறைந்த போட்டியில் இவர்கள் எவ்வாறு செயல்படப்போகிறார்கள் என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடப்பதில் புதிய சிக்கல்! வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் படிக்க | IND vs PAK: இந்தியா பிளேயிங் 11.. இப்போட்டியிலும் அபிஷேக் சர்மா விலகல்.. ஆனா சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
மேலும் படிக்க | இந்தியாவுக்கு தொடர் வெற்றிகள்… பாகிஸ்தான் போட்டிக்கு செய்ய வேண்டியது என்ன?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More