IND vs SA: இந்திய அணி செய்த 2 தவறு.. கெளதம் கம்பீரால் பறிபோன உலகக் கோப்பை!

India vs South Africa: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட போட்டி இந்தியா – தென்னாப்பிரிக்கா. இரு அணிகளும் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் மோதியது. அதில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி பதிலடி கொடுக்குமா? அல்லது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

Add Zee News as a Preferred Source

சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா 

ஆனால் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அசத்தி இருக்கிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பேட் கம்மின்ஸ் சொல்லி அடித்தார். இங்கு தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சொல்லாமல் அடித்திருக்கின்றனர். அவர்களின் திட்டம் முழுவதும் இந்தியாவுக்கு முன்னர் பழித்திருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா 20 ரன்களுக்கு 3 விக்கெட் 

நேற்று (பிப்ரவரி 22) இரவு 7 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பவுலிங் செய்தது. போட்டியில் தொடக்கம் இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 4, குயிண்டன் டி காக் 6, மற்றும் ரியான் ரிக்கில்டன் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அசத்திய மில்லர், பிரெவிஸ்

இதையடுத்து வந்த டெவால்ட் பிரெவிஸ் மற்றும் டேவிட் மில்லர் சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்கா அணியை தலை நிமிர செய்தனர். இருவர்களின் கூட்டணியை உடைக்க இந்தியா 97 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. டெவால்ட் பிரெவிஸ் 45 ரன்களிலும் டேவிட் மில்லர் அரைசதம் கடந்து 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்கா அணி 187 ரன்கள் எடுக்க காரணமானார். 

இந்தியா 111 ஆல் அவுட் 

இந்த நிலையில், பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 111 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிகபட்சமாக சிவம் துபே 42 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் தற்போது இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது சந்தேகமாகி உள்ளது.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பிளேயிங் லெவனை முடிவு செய்வதிலேயே தவறு செய்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி செய்த 2 தவறு 

அதாவது, துணை கேப்டன் அக்சர் படேலை வெளியே அமர வைத்துவிட்டு வாஷிங்டன் சுந்தரை அவருக்கு பதிலாக விளையாட வைத்தது முதல் தவறாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தரை இடது கை பேட்டர்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற ஒரே காரணத்திற்காக அவரை இந்திய அணி பிளேயிங் 11ல் எடுத்து சென்றது. ஆனால் அங்கு ரிக்கில்டன், குயிண்டன் டி காக் ஆகியோர் முதலிலேயே விக்கெட்டை இழந்ததால் அவருக்கு பந்து வீச்சில் பெரிதாக வேலை இல்லாமல் போனது. அதேபோல் சூப்பர் 8 போன்ற முக்கிய போட்டிகளில் அனுபவம் வாய்ந்த அக்சர் படேலை வெளியே விடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இரண்டாவதாக ரிங்கு சிங்கிற்கு பதிலாகவாது அக்சர் படேலை உள்ளே கொண்டு வந்திருக்கலாம். ஏனென்றால், ரிங்கு சிங் பேட்டிங்கில் 8வது இடத்தில் களமிறங்குகிறார். அவர் அந்த இடத்தில் எத்தனை பந்தை எதிர்கொள்வார், அந்த இடத்தில் இறங்கி போட்டியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி உள்ளது. இப்படி இருக்கையில், ரிங்கு சிங்கிற்கு பதிலாக அக்சர் படேலை கொண்டு வந்திருந்தால், பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே நல்ல பயன் இருந்திருக்கும். இது இந்திய அணி செய்த இரண்டாவது தவறாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த படுதோல்வியால், இந்திய அணியின் நெட் ரன் ரெட் மிகப்பெரிய குழியில் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நெட் ரன் ரேட் -3.800ஆக உள்ளது. இதனை மீட்டெடுக்க இந்திய அடுத்த இரண்டு போட்டிகளில் அமர்களமாக விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளில் வெற்றியை மட்டும் பெற்றால் நிச்சயம் போதாது. இதனால் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது சந்தேகமாகி உள்ளது. இந்திய அணி அடுத்த போட்டியாக பிப்ரவரி 26ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.