`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' – அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. 

அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ளது. 

அமைச்சர் கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள ராகுல் நவீன், தமிழகம் வருகை தர உள்ளார். இந்தப் பயணம் திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழக அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நிய செலாவணி வழக்குகள் பல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கவுகாதியில் நடந்த அமலாக்கத்துறையின் அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை ராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள். 

ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் கிடக்கின்றன. அந்த வழக்குகளின் விவரங்களை இப்போது அமலாக்கத்துறையின் இயக்குநர் கேட்பார்” என்கிறார்கள். 

சமீபத்தில் அமித் ஷா, “தமிழ்நாட்டை தி.மு.க-விடமிருந்து மீட்போம்” என்று முழங்கியிருந்தார். இதற்கு ஏற்றார்போல மத்திய அரசின் ஏஜென்சிகளும் தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது. 

அமலாக்கத்துறை

தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் கருதிட முடியாது. 

“தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறையை வைத்து நெருக்கடி கொடுத்து தேர்தல் பணிகளை முடக்கும் யுக்தியைக்கூட பா.ஜ.க தரப்பு மேற்கொள்ளலாம்” என்கிறார்கள் தி.மு.க-வினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.