தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் நாளை (பிப்.27) வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

‘தாய் கிழவி' படத்தில்
‘தாய் கிழவி’ படத்தில்

“பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்.

இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா?

இயக்குநர் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு – இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!

குறிப்பாக நகைச்சுவையோடு சொல்லியிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனை ஓட்டம் உங்கள் நற்பண்பைப் பிரதிபலிக்கிறது.

சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன்
சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன்

சிவகார்த்திகேயனுக்கு எனது பாராட்டுகள்

சிவகார்த்திகேயன் அவர்களுக்கு – ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு, அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி.

வயதுத் தடையைத் தாண்டி, ஒரு பெண்ணின் தூயத் திறமையை மையமாக வைத்துப் படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் மையத் திரைப்படத்திற்குத் துணையாக நின்றதற்கு எனது பாராட்டுகள்.

உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!

ராதிகா சரத்குமார் அவர்களுக்கு – உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

‘தாய் கிழவி’ கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம்.

ராதிகா
ராதிகா

பெருமைப்பட வேண்டிய தருணம்

உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம்.

என்னைப் பொறுத்தவரை, ‘தாய் கிழவி’ என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு.

‘தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது” என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.