நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திருக்கும்.

மழை வளமும் முறையாகக் கிடைக்கும். அதற்காகவே அந்தக் காலத்தில் சித்தர்கள் அன்னை துர்கையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அப்படிப்பட்ட் ஓர் அம்மன் ஆலயம்தான் மேல்கலிங்கப்படி எட்டுக்கை அம்மன் கோயில்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இயற்கையெழில் சூழ்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கிறது எட்டுக்கை அம்மன் கோயில். கொல்லிமலை என்றாலே அது சித்தர்கள் வாழும் பகுதி என்பதை அனைவரும் அறிவோம்.

இன்றும் சித்தர்கள் பலர் அரூபமாக வாழ்ந்து தவம் செய்கிறார்கள். காரணம் அங்கே இருக்கும் சாகாவரம் தரும் மூலிகைகள் என்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதத் தலத்தில்தான்

தன்னைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களின் பலதரப்பட்ட வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிவைக்கும் வரப்பிரசாதியாக அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை அம்மன்.

மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன்
மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன்

முற்காலத்தில் சதுரகிரி மலையில் பதினெண் சித்தர்களும் வாழ்ந்துவந்தனர். அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு பெரியமலை, காஞ்சேரிமலை, பச்சமலை, கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, அருநூற்றுமலை எனப் பல மலைகளைக் கடந்து கொல்லிமலைக்கு வந்தார்கள். அந்த மலையின் அழகும் அமைதியும் அவர்கள் மனதைக் கொள்ளைகொள்ள வைத்தது. அதுவே தவம் செய்ய ஏற்ற இடம் என்று முடிவு செய்து தங்கள் தவத்தைத் தொடங்கினர்.

அதுவோ வனவிலங்குகளும் கொடுமையான அசுரர்களும் வாழும் பகுதி. எனவே தங்கள் தவத்துக்கு ஏதேனும் தீங்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். அகிலம் ஆளும் அன்னையை எட்டு கரத்தோடு உருவாக்கினர். காண்பதற்கு வாலையாக அதேவேளையில் எட்டு கரத்தோடும் அமைந்த அந்த அன்னை அசுர சக்திகளை அகற்றும் வகையில் உக்கிரமாகப் பிரதிஷ்டை செய்தனர்.

அன்னையின் திருக்கோலம் பிற உயிர்களை மிரட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தாம் மட்டுமே தரிசனம் செய்யும் வகையில் சில ஏற்பாடுகளைச் செய்து அந்த ரூபத்தை மறைத்தனர். அம்மனுக்கு எட்டு கைகள் இருந்ததால், ‘எட்டுக்கை அம்மன்’ என்றும், குழந்தை வடிவத்திலிருந்ததால், ‘கொல்லிப்பாவை’ என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன.

காலப்போக்கில் சித்தர்கள் வேறு இடம் பெயர அந்த அம்மன் திருமேனி அப்படியே விடப்பட்டது. அம்மன் மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் திருவுளம் கொண்டாள்.

நீண்ட காலத்துக்குப் பிறகு சில மேய்ப்பர்கள் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தப் பகுதிக்கு வந்தபோது ஓரிடத்தில் மாடுகள் எதையோ கண்டு மிரண்டதுபோல் அலறியடித்துக் கொண்டு திரும்பிவிட்டன.

உடனே அங்கு சென்று பார்த்தபோது எட்டுக்கைகளுடன் அம்மன் அங்கே தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். விக்ரகரூபமாக அவதரித்த அந்த அன்னை சித்தர்களால் வழிபடப்பட்டவள் என்பதை உணர்ந்த மக்கள், அவளுக்கு அங்கேயே ஒரு குடிசை அமைத்து அதில் எழுந்தருளச் செய்தனர். தற்போது அந்த இடத்தில் ஒரு கோயில் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்
மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்

நாளுக்குநாள் எட்டுக்கை அம்மனை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம், அவள் நிகழ்த்தும் அற்புதங்கள். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்கள் வீட்டில் தொட்டில் ஆடும் என்கிறார்கள்.

அதற்கு இங்கே ஒரு பரிகாரமும் செய்யப்படுகிறது. செப்புத் தகட்டில் எழுதி அதை இங்கே கட்டிவிட்டுச் சென்றால், விரைவில் கருத்தரிப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோன்று, கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்துவரை சென்றவர்கள் கூட மீண்டும் தமக்குள் மனஸ்தாபம் நீங்கி, மறுபடியும் ஒன்றுசேர்கிறார்கள்.

இவர்கள் தங்கள் இருவருடைய துணியையும் கொண்டுவந்து, கோயிலிலிருக்கும் சூலாயுதத்தில் கட்டிவிட்டுச் சென்றால், மறுபடியும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கணவன் மனைவி மட்டுமல்ல… சண்டைபோட்டுப் பிரிந்த உறவுகள், நட்புகள்கூட இப்படிச் செய்து வேண்டிக்கொண்டால், ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பதும் நம்பிக்கை.

இப்படி ஒன்று சேர்ந்த தம்பதிகளும் இங்கு வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தைகளும் தினமும் வந்து அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதை நம்மால் காணமுடியும். இங்கே கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவதுடன், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

சித்திரா பௌர்ணமித் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவின்போது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்
மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்

இந்த ஆலயத்துக்கு வர விரும்பும் பக்தர்கள், நாமக்கல்லிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ள கொல்லி மலைக்கு, சேந்தமங்கலம், காரவல்லி வழியாகக் கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில், பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சுமார் 2 கி.மீ வனப் பகுதியில் நடந்துசென்றால், கோயிலை அடையலாம்.

ஆலயம் எப்போதும் திறந்துதான் இருக்கும். என்றாலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால், காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் செல்வது நல்லது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.