நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், மார்ச் முதல் வாரத்தில் பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் (Centre of Excellence — CoE) சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய ட்ராய் கூலியின் (Troy Cooley) நான்கு ஆண்டு கால பணி டிசம்பரில் முடிவடைந்தது. அதையடுத்து CoE வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் இருந்தது. பிசிசிஐ பிப்ரவரி 9 அன்று இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. கூலிக்கு மாற்றாக யாரை நியமிப்பது என்பதை வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை.

மாநில கிரிக்கெட் சங்கங்களிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாகீரின் வழிகாட்டுதலின் கீழ் பெங்களூருவில் உள்ள CoE-இல் நடைபெறும் சிறப்பு வேகப்பந்து வீச்சு முகாமில் பங்கேற்பார்கள். CoE-இன் கிரிக்கெட் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மன் இந்த முயற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
“ஜாகீர் பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்குத் தன்னால் உதவ முடியும் என்று நம்புகிறார். அவரது அந்தஸ்துள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளர் பிசிசிஐ திட்டங்களில் ஆர்வம் காட்டுவது நல்ல அறிகுறியே. இருப்பினும், குடும்பத்தை விட்டு அதிக நேரம் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்பதால், CoE-இல் அவர் முழுநேரப் பணியை ஏற்க விரும்புகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வீரர்களை கண்டெடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு வடிவத்திலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவம், தேர்வுக் குழுவினருக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. எனவே, BCCI அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிவதில் மும்முரம் காட்டி வருகிறது.