சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம்.

பழைமையின் புதிர்கள்…

சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின்‌ வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

தண்டனைகளின் கோட்டை

பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது.

உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.

தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும்.

அப்படி என்னதான் உள்ளது…

சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும்.

ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும்.

வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது.

மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது.

நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும்.

அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, “பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை” என்று குறிப்பிட்டார்கள்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, “இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

“வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது” என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்.

இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.