அனுமி: “ஹீரோவோ? ஹீரோயினோ? நல்ல படமாக இருந்தால் போதும்" – நடிகை பாவனா

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘அனுமி’. இந்தப் படத்தில் நடிகை பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ரியாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஒரு துப்பறியும் கதையாகவும், அதே சமயம் அறிவியல்பூர்வமான பின்னணியையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் படத்திற்கு கிடைத்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படக்குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்தப் படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 6-ம் தேதி (நாளை) வெளியாகிறது.

நடிகை பாவனா
நடிகை பாவனா

இந்தப் படத்தின் பிரஸ் ஷோ சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை பாவனா, “தமிழில் நடிக்கக் கூடாது என்று எந்த எண்ணமும் இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாகத் தொடர்ந்து நடிப்பேன். மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் பிஸியாக இருந்ததால்தான் தமிழில் சிறிது இடைவேளை ஏற்பட்டது. ‘அனுமி’ படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

ஒரு வழக்கைத் துப்பறியும் நிஜமான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, யதார்த்தமான முறையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஹ்மான் ஒரு முக்கியப் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பகுதியை தயாரித்திருக்கிறேன். படத்தின் ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இணைய முடியுமா? என்று படக்குழு கேட்டபோது, படமாக்கப்பட்ட காட்சிகளின் தரத்தைப் பார்த்துத் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் இதில் தயாரிப்பாளராகவும் பங்கெடுக்கத் தீர்மானித்தேன்.

நடிகை பாவனா
நடிகை பாவனா

இப்போது ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்ற அந்தப் பழைய முக்கோணக் கதைகள் மறைந்துவிட்டன. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கதைதான் முதன்மையானது. அதில் நாங்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகப் பங்களித்துள்ளோம். வெறும் ‘பெண் மையக் கதாபாத்திரம்’ என்பதற்காக மட்டும் எந்தப் படத்தையும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்வதில்லை. நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நல்ல கதையாக இருந்தால், அதில் நடிப்பது ஹீரோவா அல்லது ஹீரோயினா என்பதைப் பார்க்காமல் ரசிகர்கள் கண்டிப்பாகப் பேராதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்துக்கு கேரளாவில் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு, தமிழ்நாட்டு ரசிகர்களிடமும் கிடைக்கும் என நம்புகிறேன். நானே திட்டமிட்டு ஒரு காதல் கதைப் படத்தில் நடிக்க முடியாது. ஒரு சிறந்த இயக்குநர் நல்ல காதல் கதையுடன் வந்தால் கண்டிப்பாக மீண்டும் தமிழ் ரசிகர்களுக்காக அத்தகைய படங்களில் நடிப்பேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.