வடம் விமர்சனம்: 'முரட்டுக் காளை' கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா!

சிங்கம்புணரியில் வசிக்கும் வெற்றி (விமல்), பாண்டி முனி என்கிற காளை மாட்டை அன்போடும் வளர்க்கிறார். மிகவும் நேர்மையானவராக இருக்கும் அவருடைய தந்தை சந்தனவேல்தான் (நரேன்) ஊருக்கே தலைவர். வடமஞ்சு போட்டியில் தோல்வியையே சந்திக்காத ரத்னவேலின் (நட்டி) காளைக்குப் போட்டியாக பாண்டி முனியைக் களமிறக்குகிறார் வெற்றி.

வடம் விமர்சனம் | Vadam Review
வடம் விமர்சனம் | Vadam Review

இதனால் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் ரத்னவேல் வெற்றியைப் பழிவாங்கினாரா, இந்தப் பகை வெற்றியை எங்குக் கொண்டு செல்கிறது, நேர்மையாக இருந்ததனால் சந்தனவேல் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பனதான் கேந்திரன் இயக்கியிருக்கும் இந்த ‘வடம்’.

தந்தையிடத்தில் கடைப்பிடிக்கும் பொறுமை, மோதல் நேரங்களில் முறுக்கு மீசையுடன் எட்டிப் பார்க்கும் ரௌத்திரம் எனப் பழங்கால கிராமத்து சினிமா நாயகன் தோற்றத்தில் வரும் விமல், நடிப்பில் திமிலைச் சிலுப்பும் காளைகளைப் போல மாஸ் காட்டாமல் வெறுமனே வந்து போயிருக்கிறார்.

வில்லனாக நட்டி நல்லதொரு டச் கொடுத்திருந்தாலும், அது அவரிடத்தில் பலமுறை வெளிப்பட்ட தோற்றமே! கிச்சு கிச்சு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் பாலசரவணனிடம் இருந்து பளிச்சிடும் விஷயங்கள் வராமல் போயிருப்பது ஏமாற்றம்.

வடம் விமர்சனம் | Vadam Review
வடம் விமர்சனம் | Vadam Review

நாயகி சன்ஷ்கா ஸ்ரீக்கு பழைய ‘மதுரை பட நாயகி’ அசைமென்டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் செயற்கைத்தனமே மிஞ்சுகிறது. ஊர்த் தலைவர்களாக நரேன், மதுசுதன் ராவ் ஆகியோர் டெம்ப்ளேட் ரூட்டையே பிடித்துப் பயணித்திருக்கிறார்கள்.

வெக்கை உணர்வூட்டும் லைட்டிங், மின்னல் வெட்டுவது போன்ற லைட்டிங் ஆகியவற்றில் நேர்த்தியைக் கடைப்பிடித்த ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், களத்தில் துள்ளும் காளைகளையும் கச்சிதமாக ஃபிரேமுக்குள் புகுத்தியிருக்கிறார்.

அழுத்தமில்லாத காட்சிகளை இறுக்கமில்லாத பாணியில் கத்தரித்து படத்திற்குள் சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சபு ஜோசப். டி.இமான் இசையில் பாடல்களின் மேள தாள பீட்களில் நவீன டச் மிஸ்ஸிங்! அதே சமயம், பின்னணி இசையில், ஹிரோயிச சண்டைகளுக்கும், அன்னநடைக்கும் மாஸும் ஃபயரும் மூட்டத் தவறியிருக்கிறார்.

வடம் விமர்சனம் | Vadam Review
வடம் விமர்சனம் | Vadam Review

வடமஞ்சு போட்டிகளுக்காக காளையை ஆசையாக வளர்க்கும் நாயகனுக்கும், வடமஞ்சு வெற்றியைக் கெளரவமாக எண்ணும் வில்லனுக்கும் இடையேயான மோதல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கேந்திரன்.

பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே, இதுவும் குதித்து ஸ்லோவ் ரேஸ் ஓட்டத் தொடங்குகிறது. அழுத்தமின்றி எழுதப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் அபத்தமான காமெடிகள், ‘அவுட் டேடட்’ காதல் சடுகுடு ஆட்டங்கள் ஆகியவற்றுடன் கதை மோதல் புள்ளியை எட்டுகிறது.

இப்படியே தடுமாற்றம் நிறைந்த பாதையிலேயே பயணிக்கும் முதல் பாதி சோர்வுடன் இடைவேளை பக்கம் ஒதுங்குகிறது.

செயற்கையான காட்சியமைப்புகளால் இடைவேளை ட்விஸ்ட்டை நமக்கு முன்கூட்டியே வெளிச்சம் போட்டுச் சொல்லிவிடுகிறார்கள். பிறகும் அதனைச் சம்பவமென பில்டப்போடு அரங்கேற்றுவதெல்லாம் ‘நானும் ரௌடிதான்’ ரகம் ப்ரோ!

வடம் விமர்சனம் | Vadam Review
வடம் விமர்சனம் | Vadam Review

இரண்டாம் பாதியில், கதைக்குள் கதை, ஒன்று முடிந்த பிறகு மீண்டும் துளிர்க்கும் கிளைக் கதை என நீட்டிச் செல்லும் ஐடியாக்களும் நம்மைக் குழப்புவதுடன் ‘கிறுகிறு’க்கவும் வைக்கிறது. அழுத்தமான பின் காரணங்கள் இல்லாமல் திரைக்கதையின் எமோஷனல் முடிச்சுகளை அப்படியே அவிழ்த்திருப்பதும் ‘லொஜக் மொஜக்’ ஆட்டம்!

நடிகர்களின் கச்சிதமான பங்களிப்பு, புதுமையான கதையம்சம் எனப் பலவும் இந்த வடமஞ்சு விரட்டு சினிமாவில் ஆப்சென்ட் ஆகியிருப்பதால், படம் பிடி மாடு ஆகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.