Kadhal Reset Repeat Review: 'அம்னீஷியா' நாயகி, 'ஒன் சைடு லவ்' நாயகன்; எப்படி இருக்கு இந்த லவ் படம்?

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா ஷங்கர்) ‘ஃப்ளை ஹை’ என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகியாக இருக்கிறார்.

அதில் இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அதிதிக்கும் காதல். நாயகன் சித்தார்த் (மதும்கேஷ்) அதிதி எங்கே சென்றாலும் அவருக்குத் தெரியாமல் ஃபாலோ செய்வது, வீட்டின் வாசலில் வந்து நிற்பது என வன்தொடர்தலோடு தீவிரமாக ஒன் சைடு லவ் செய்கிறார்.

அதிதியும், ஹரிச்சந்திரனும் ஸ்காட்லாந்தில் நடக்கும் இசைப்போட்டியில் கலந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஸ்காட்லாந்து செல்கிறார்கள்.

அதிதிக்குத் தெரியாமல் சித்தார்த்தும் ஸ்காட்லாந்து வரை பின்தொடர்கிறார். அங்கே மூவருக்கும் நடக்கும் சம்பவங்களே விஜய் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் கதை.

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்
Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

நாயகன் மதும்கேஷ், நாயகி ஜியா ஷங்கர் இருவருக்குமே இது அறிமுக படம். யாரிடமும் அவ்வளவு பேசாத, சற்று ஒதுங்கியே இருக்கும் இன்ட்ரோவெர்ட் இளைஞனாக மதும்கேஷ். கேரக்டர் ஓகே. அதற்கென்று நடிப்பிலும் இன்ட்ரோவெர்ட்டாக இருந்தால் எப்படி? நடிப்பில் பயங்கரமாக ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரம் இல்லைதான். ஆனால், ஸ்கோரே பண்ணாமல் இருப்பது நெருடல். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

துறுதுறு சேட்டைகளிலும், என்ன நடந்தது, எங்கே இருக்கிறோம், யார் இவர்கள் என அனைத்தும் மறந்துபோகும் சூழலிலும் ஜியா ஷங்கரின் நடிப்பில் குறையேதுமில்லை.

மலையாளத்தில் பல படங்களில் நடித்த அர்ஜுன் அசோகனுக்கு இது முதல் தமிழ்ப் படம். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் ஒன் லைனர்கள் ஆங்காங்கே வொர்க் ஆகியிருக்கின்றன. இவர்கள் தவிர, ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் படத்தில் இருக்கின்றனர்.

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்
Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

நாயகனின் கதாபாத்திரம் எழுதப்பட்டது முழுமையில்லாத உணர்வைக் கொடுக்கிறது. குன்னூர், சென்னை, ஸ்காட்லாந்து என எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அடையை அவர் அணிந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஒன் சைட் லவ்வர்தான் அதற்காகப் பெரும்பாலான காட்சிகளில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்பது போல் மறைந்துகொண்டும் ஒளிந்துகொண்டும் இருப்பது ஏனோ? இத்தனை ஆண்டுகளாக மறைந்திருந்தும் ஃபாலோ செய்தும் பார்ப்பவரை, ஒருமுறை கூட நாயகி பார்த்திருக்கவில்லையா பாஸ்?

ஒன் லைனாக சுவாரஸ்யமாக இருந்தாலும் அதை முழு படமாக மாற்றுவதில் இருந்த சிக்கல் தெரிகிறது. ஒரு நாள் மட்டுமே எல்லாம் நினைவிலிருப்பதும் தூங்கி எழுந்தால் எல்லாம் மறந்துவிடுவதுமாக இருக்கும் நாயகியை நாயகன் சித்தார்த், நாம் இருவரும் காதலித்தோம் என்று சொல்லி மருத்துவமனையில் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்.

மறுப்பக்கம், ஹரிச்சந்திரனும் நாம் இருவரும் காதலித்தோம் என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார். சித்தார்த், ஹரிச்சந்திரன் இருவரும் தங்கள் காதலைச் சொல்லி அதிதியின் மனநிலையை ரீசெட் செய்ய, மறுநாள் எல்லாமே மறக்க என நகர்கிறது பிரதான பகுதி.

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்
Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

Anterograde Amnesia என்ற மறதி நோய் குறித்து தொடக்கத்திலேயே புரியவைத்துவிட்டாலும், அதை ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்பக் காட்டுவது அயற்சியையே கொடுக்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் சில ஒன் லைனர்கள், அர்ஜுன் அசோகனின் சில காமெடிகள் வொர்க் அவுட்டானாலும் ‘வாவ்’ என்று சொல்வதற்கு படம் முழுவதும் ஏதுமில்லாதது பெரிய மைனஸ்.

இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் எவ்வித தாக்கத்தையும் தராமல், தேமேவென ஓடிக்கொண்டே இருக்கின்றன. மேலும், படத்தின் ஆன்மாவாக இருக்க வேண்டிய உணர்வுப்பூர்வமான காட்சிகளும் பெரிதாகச் சோபிக்கவில்லை.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அழகாக இருக்கும் ஸ்காட்லாந்தைப் பேரழகாகக் காட்டியிருக்கிறது. அட்டகாசமான விஷுவல்கள் படத்தின் தன்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையைக் கேட்கும்போது, ‘இசை இருக்கிறது; ஹாரிஸ் ஜெயராஜ் எங்கே?’ என்றே கேட்கத் தோன்றுகிறது. திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்க எடிட்டர் ஆண்டனி முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பலனளிக்கவில்லை.

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்
Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

படத்தின் லொகேஷன்கள், விஷுவல்கள் ஆகியவை பிரமாண்டமாக இருந்தாலும் காட்சிகள் எதுவும் எமோஷனலாக கனெக்ட் செய்யமுடியாமல் போவதால் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உணர்ச்சிகளையும் கடத்தாமல் ‘அயற்சி ரீசெட் ரிப்பீட்’ கடந்து செல்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.