டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார்.
விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், “இது தெரு ஒன்றில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளை எல்லாம் அழைத்து ‘வாங்க கிரிக்கெட் விளையாடலாம்’ என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது.

எட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து மூன்றை மீண்டும் அழைத்து விளையாடி, இறுதியில் ‘பாருங்கள், நான் ஜெயித்துவிட்டேன்’ என்று இந்தியா சொல்கிறது. இதுதான் தற்போது நடந்திருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவருடைய விமர்சனத்திற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த அவர், ”இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என் நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் வெற்றியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாததால் தான் அவர் இப்படி சாடுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.