காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு: `அறை என்பது வலிதான், ஆனாலும்.!' – Lyricist முத்தமிழ் | வரித்துணையே 8

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

Kadhal Ara Onnu - Lyricist Muthamizh
Kadhal Ara Onnu – Lyricist Muthamizh

இன்றைய பகுதிக்கு, ‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ பாடல் பற்றி பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசினோம். ஒவ்வொரு ஜென்ரேஷனுக்கும் சில காதல் பாடல்கள் நெருக்கமானதாக அமையும். அப்படி ஒரு தலைமுறையினருக்கே பேவரிட்டாக அமைந்த பாடல் இது. இப்பாடல் பற்றி பேசுவதற்கு அவரைச் சந்தித்தோம்.

பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசுகையில், “வாங்க! என் பாடல்களில் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அதன் சுவாரஸ்யம் குறையாமல் பேசுவோமே…” என்ற புத்துணர்வோடு பேசத் தொடங்கினார்.

“முதலில் நடிப்பு, டைரக்ஷன் ஆசையில்தான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால், சினிமாவில் 10 வருடம் நடித்தாலும் நான் எப்படியான நிலையில் இருப்பேனென்று சில சந்தேகங்கள் எழுந்தன. என் கல்லூரி சமயத்திலிருந்து நான் நன்றாகப் பாடவும் செய்வேன். பாடல்கள் எழுதினால் போஸ்டரில் நம் பெயர் வந்துவிடும். அதிலிருந்து ஒரு வெளிச்சம் கிடைக்குமென நினைத்து பாடலாசிரியரானேன். என் கல்லூரி நண்பன் சந்தோஷ் நாராயணன் படத்திலிருந்து என் பாடலாசிரியர் பயணம் தொடங்கியது.” என்றவரிடம், ‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ பாடல் தொடர்பாகப் பேசத் தொடங்கினோம்.

Kadhal Ara Onnu - Lyricist Muthamizh
Kadhal Ara Onnu – Lyricist Muthamizh

மலர்ந்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், “காதலை அனைவரும் மென்மையானது எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், தொடக்கத்திலேயே இதில் நான் காதலை அறை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன் என்று சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், காதலில், பெண்ணொருவள் பார்வையால் என்னை அடித்துவிட்டாள் எனச் சொல்வார்களே, அப்படியான அர்த்தத்தைத்தான் இந்த வரியில் கொண்டு வர நினைத்தேன்.

‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ என்பது வலிதான். ஆனால், அது சுகமான வலி ! படத்தின் கதையை மையப்படுத்தி இயக்குநர் பாலாஜி மோகன் எனக்காக சூழலைச் சொன்னார். காதலர்கள் இருவரும் பேசிக்கொள்ள முடியாத சூழல். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்பதை சூழலாகச் சொன்னார். இந்த சூழலுக்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் அற்புதமான சந்தத்தைக் கொடுத்தார். அவர் அமைத்திருந்த தாளம் எனக்குள்ளிருக்கும் வரிகளை எழுப்பியது எனலாம். ஜாலியான வார்த்தைப் பயன்பாடுகளை இந்தப் பாடலுக்குள் கொண்டு வந்தேன்.

Kadhal Ara Onnu - Lyricist Muthamizh
Kadhal Ara Onnu – Lyricist Muthamizh

இளைஞர்களுக்கும் இந்தப் பாடல் மிக நெருக்கமாகிவிட்டது. தாளத்திற்கேற்ப வரிகளை எழுதும்போது, அது பளிச்சென்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன். காதலை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், காதலர்களால் பேசிக்கொள்ள முடியவில்லையே என்கிற இருவர்களின் புலம்பலே இந்தப் பாடல். முதன்முதலில் துல்கர் சல்மான் தமிழில் நடித்த படத்தில் நான் பாடல் எழுதியிருப்பது பெரிய மகிழ்ச்சி.” என்றார்.

“இந்தப் படத்தில் மற்ற பாடல்களை மதன் கார்க்கி சார் எழுதியிருந்தார். பெரிய பாடலாசிரியர் பணிபுரியும் ஒரு படத்தில் சக பாடலாசிரியராக நானும் பங்குக் கொண்டது இதுவே முதல் முறை. அவர் இந்தப் பாடலுக்கு எனக்குக் கொடுத்த பாராட்டும் மிக முக்கியமானது. ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர், ‘இந்தப் படத்தில் இருக்கும் பாடல்களில் முத்தமிழ் எழுதியிருக்கும் ‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ பாடல்தான் அனைவரும் பிடிக்கும்’ என்றார். இதனை என் கரியரில் முக்கியமான பாராட்டாகவும் நான் கருதுகிறேன். அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டை, வைரமுத்து சாரிடம் இருந்து கிடைத்த பாராட்டாகவே நான் கருதுகிறேன்.

Kadhal Ara Onnu - Lyricist Muthamizh
Kadhal Ara Onnu – Lyricist Muthamizh

சினிமாவில் இருக்கும் சக பாடலாசிரியர்களும் ‘இந்தப் பாடலை நீங்கள் எப்படி எழுதினீர்கள்’ எனவும் கேட்டிருக்கிறார்கள். இதிலிருக்கும் எதுகை மோனை அம்சங்களையும் பலர் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். அதுதான் இந்தப் பாடலின் முக்கிய விஷயமாகப் பார்க்கிறேன். நான் என் பாடல்களில் எதுகை மோனை அம்சங்கள் நிறைந்திருப்பதை எப்போதும் கவனித்துக் கொள்வேன். அதிலிருந்து நான் விலகிச் சென்றாலும் மீண்டும் அதனை நினைவுப்படுத்தி பாடல்களுக்குள் கொண்டு வந்துவிடுவேன்.” என்றார்.

(தொடரும்.!)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.