விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுடன் பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் அனைத்தையும் மாணவ மாணவியரை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வைக்க நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள்

இதற்கு ஒரு படி மேலாக  இப்பள்ளியில் பணியாற்றும் லெட்சுமி என்ற ஆசிரியைக்கு சொந்தமான பேன்சி கடை, இப்பள்ளியின் அருகில் இயங்கி வருகிறது. அந்த கடையை திறப்பதே மாணவர்கள்தான் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேன்சி கடையை தினமும் காலையில் திறந்து சுத்தம் செய்வதுடன் ஆசிரியை விற்பனைக்கு வாங்கி வைத்துள்ள தின்பண்டங்களை பள்ளி இடைவெளி நேரங்களில் மாணவர்கள் மூலமாகவே விற்பனை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.  

மேலும், அதே ஆசிரியை சாப்பிட்ட பாத்திரங்களை மாணவர்களே சுத்தம் செய்கின்றனராம். இப்படி அனைத்து நிலைகளிலும் பள்ளி மற்றும் ஆசிரியரின் தனிப்பட்ட இடங்களில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் மாணவ மாணவியர் பயன்படுத்த பள்ளி வளாகத்தில் கழிவறை வசதி இல்லாதது, பெற்றோரை கவலையடைய செய்துள்ளது.

கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.