திருச்சி: "விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் தி.மு.க!" – பிரதமர் மோடி காட்டம்

தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. நேற்று திருச்சியில் அரசு நிகழ்ச்சி மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை மணலியில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் மசகு எண்ணெய் தயாரிப்பு ஆலை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் உள்ளிட்ட 5,655 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

narendra modi

மேலும், நாகர்கோவில் – சரலப்பள்ளி இடையிலான அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில்களின் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருநை அருங்காட்சியக வடிவ கேடயத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், முருகன் மற்றும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம். வீரத்துக்கும், பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி. மருதிருவர், மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன். மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன். கடந்த முறை தமிழகம் வந்தபோது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன். தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார். திருச்சிக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.

narendra modi

இவை, உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு தேவையானவை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிவாயு கட்டமைப்புக்கு இன்று அடிக்கல் நட்டப்பட்டுள்ளது.

ரூ.3,700 கோடி மதிப்பிலான இந்த கட்டமைப்பு நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும். இயற்கை எரிவாயு என்பது காற்று மாசை குறைக்கும். சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே உள்ள மிகப் பெரிய ஆலைகளில் ஒன்று. இது, தமிழ்நாடு தொழிற்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மசகு எண்ணெய் தயாரிப்பு, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறையும். தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும்.

crowd

370 கிலோ மீட்டர் நீள ஊரகப் பகுதி சாலைகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள். இது, ஊரகப் பகுதி பொருளாதாரத்தை உயர்த்தும். கடந்த ஆண்டு கங்கைகொண்டசோழபுரம் வந்திருந்தேன். ராஜேந்திர சோழனின் பிரமாண்ட கட்டுமானத்தைப் பார்த்து வியப்பு அடைந்தேன். இது, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இடம். அங்கும் ஒரு நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ரயில் சேவைகளை தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம், சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேம்பட்ட இந்தியா – மேம்பட்ட தமிழ்நாடு என்பது தான் எங்களது இலக்கு. அதற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் முழு அர்ப்பணிப்புடன் மத்திய அரசு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.

narendra modi

வருங்காலத்திலும் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்து தி.மு.க-வை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தயாராகிவிட்டது. ஒரு குடும்பத்திற்கான ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ஒட்டுமொத்த மக்களுக்குமான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

திருச்சி மண்ணில் ரூ.5655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன். மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிகையை மாலையில் பாரீஸ், நியூயார்க்கில் விற்கலாம். கடந்த, 2014 – ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் அரசு வழங்கிய நிதியை விட பல மடங்கு அதிகம்.

crowd

கடந்த, 2021 -ம் ஆண்டில் தி.மு.க அரசு அமைந்தது. தி.மு.க ஆட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது. அமைச்சர்கள் மாறலாம். சட்டசபை மாறலாம். ஆனால், அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல். இந்த மாதிரிக்கு பெயர் போனது தான் தி.மு.க. இந்த மாதிரி தான் ஒரே ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்-ஆக மாற்றியிருக்கிறது.

திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலைவாங்கி தருவதாக பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். வேலை பணத்திற்காக விற்கப்படும்போது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது?. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ, அதேபோல தமிழத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது.

narendra modi

அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது. தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுபவர்கள் ஒருபுறம், மறுபுறம் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படும் நாங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைத்து இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்து செல்வோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.