“8 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் எல்லை தாண்டிவிட்டீர்கள்" – ராஷ்மிகா காட்டம்

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரபட்டு வந்தன.

அந்தவகையில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமன் மந்தனா பேசியதாகக் கூறப்படும் ஒரு பழைய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

அந்த ஆடியோவில், ரஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோரின் முறிந்த நிச்சயதார்த்தம் குறித்தும், ரக்ஷித் குடும்பத்தினர் ரஷ்மிகாவை சினிமாவில் இருந்து விலகச் சொன்னது குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் நீண்ட கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, டார்கெட் செய்து பழிவாங்குவது போன்ற செயல்களை செய்யத் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்!

நான் சொல்லாத விஷயங்களை கதைகளாக சித்தரித்து வியூஸ்காக பெரிதுபடுத்தப்படுவதையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இவை எல்லாம் என்னை காயப்படுத்தினாலும் நான் பொறுமையாகத் தான் இருந்தேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த விஷயங்கள் எல்லையை தாண்டியிருக்கிறது.

எட்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த தனிப்பட்ட உரையாடல் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளாக, தாக்குதல்கள் என்னை மட்டும் பாதிக்கும்போது மௌனம் காத்தேன். இன்று, மற்றவர்கள் இதில் இழுக்கப்படும்போது இனி மௌனமாக இருக்க முடியாது. நடந்து முடிந்த கசப்பான விஷயங்களை மீண்டும் கிளறுவது என்னை மிகவும் காயப்படுத்துகிறது.

திருமணத்திற்குப் பிறகு எனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில், இது போன்ற செயல்கள் தேவையற்றவை. என்னை விமர்சிப்பதோடு நில்லாமல், என் குடும்பத்தினரையும் இதில் இழுத்துத் தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள் சிதைக்கப்பட்டவை.

அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் ஊடகங்களும், இன்ஃப்ளுயன்சர்களும் உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை நமக்கு மட்டுமே உரியது. நம் வாழ்வு நம்முடையது. நம் முடிவுகளை நாமே எடுப்போம், எடுத்துக்கொண்டேயிருப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.