அடியே… (பேச்சுலர்) : "இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்!" – ஜிகேபி | வரித்துணையே 9

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

'அடியே' பாடல்
‘அடியே’ பாடல்

இன்றைய பகுதிக்கு, பாடலாசிரியர் ஜிகேபி எழுதிய ‘அடியே’ பாடல் பற்றி பேசுவதற்கு அவரைச் சந்தித்தோம். ‘அடியே’ பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.’ என கலகலப்புடன் வரிகள் பற்றி அவர் பேசத் தொடங்கினார்.

“இந்தப் பாடல் தொடங்கும்போதே சிலருக்கு சந்தேகங்கள் வந்திருக்கும். தேன் எப்படி போதையாகும் என்பது பலரின் கேள்வியாக இருந்திருக்கும். ஆனால், வண்டுகளுக்கு அந்தத் தேன்தான் போதை. இந்தப் பாடலில் வண்டுதான் கதாநாயகன். இந்த மொத்தப் பாடலையும் கிட்டத்தட்ட 3 நாட்கள் எழுதினேன். ஆனால், இடைப்பட்ட பகுதிகளில் வரும், ‘இரவுகள் நீள, இமைகளும் மூட, இடைவெளி ஏனோ கண்மணியே, யுகங்களைத் தாண்டி, விரல்களைப் பூட்டி, முத்தங்களைத் தின்போம் அடியே’ என்கிற வரிகளுக்கு மட்டும் ஒரு நாள் முழுவதுமாக செலவழித்தேன். ஏனெனில், திபு நினன் தாமஸ் வரிகள் கச்சிதமாக டியூனுக்குள் அமர வேண்டும் என நினைப்பார்.

பாடலாசிரியர் ஜிகேபி
பாடலாசிரியர் ஜிகேபி

அதற்காகவே இந்த வரிகளுக்கு சிரத்தை கொடுத்து எழுதினேன். நான் என்னுடைய கரியர் தொடக்கம் முதல் பாசப் பாடல்களாகவே எழுதி வந்தேன். நான் எழுதியதிலேயே முழுமையான ரொமான்டிக் பாடலென்றால் அது ‘அடியே’தான். ‘நீ கவிதைகளா’ பாடல் லைட்டான ரொமான்டிக் பாடல்தான். அதே சமயம், இந்த பாடல் எழுதும்போது ரொமான்ஸ் என்கிற பெயரில் அபத்தமாகவும் வரிகளை எழுதிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன்.

பாடல் எழுதி முடித்ததும், மீண்டுமொரு முறை வரிகளைப் படித்துப் பார்க்கும்போது ‘செம்ம. நீ ஏதோ இந்தப் பாடலுக்கு செய்திருக்கிறாய்’ என்ற திருப்தியான உணர்வு என்னிடம் இருந்தது. எப்போதும் பாடல் எழுதும்போது டியூனை மட்டும்தான் கேட்டு எழுதுவேன். ஆனால், ‘பேச்சுலர்’ படத்தின் இயக்குநர் எனக்கு இப்பாடலுக்காக ஷூட் செய்த மான்டேஜ்களையும் காட்டினார். அந்த மான்டேஜ்களும் இந்தப் பாடல் எழுதுவதற்கு எனக்கு உதவின. முக்கியமாக, இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்.

'அடியே' பாடல்
‘அடியே’ பாடல்

தொடர்ந்து அவர்கள் எனக்கு மெசேஜ் செய்து இந்தப் பாடல் பற்றி உரையாடியிருக்கிறார்கள். இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் எனவும் பலர் கேட்டார்கள். நான் இங்கேயேதான் இருக்கிறேன், இப்போதுதான் சரியான வாய்ப்பு வந்திருக்கிறது எனப் பதில் சொல்லி கடந்துவிடுவேன். காதலன், காதலியை அன்புடனும் காதலுடனும் அழைக்க வேண்டும். அதுதான் இந்தப் பாடலின் தொடக்கம் எனவும் முடிவு செய்துவிட்டோம். ஆனால், காதலில் எப்போதும் பயன்படுத்தப்படும் வழக்கமான வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் திபு நினன் தாமஸ், ‘அடியே’, ‘போதை தேனே’ வரிகளை எனக்கு எடுத்துத் தந்தார்.

சினிமாவுக்குள் வரும்போதே பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட பாடல்களை நான் எழுதக் கூடாது என முடிவுடன்தான் வந்தேன். அதனை இன்று வரைக்கும் சரியாகப் பின்பற்றியும் வருகிறேன். ஒரு முறை மட்டும் என்னுடைய சூழல் அப்படிச் செய்ய வைத்துவிட்டது. ஆனால், இனி நான் அப்படி எழுதவே மாட்டேன்.” என்றவர் மீண்டும் ‘அடியே’ பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார். ‘அடியே பாடலை டீகோட் செய்து படித்தவர்களுக்கு அது அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

பாடலாசிரியர் ஜிகேபி
பாடலாசிரியர் ஜிகேபி

எப்போதுமே அவரவர் பார்வையிலிருந்து பாடல்களை அணுகும்போது, அது ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும். இந்தப் பாடலுக்குள் பூடகமாக சில வரிகளை நான் அமைத்திருக்கிறேன். அதையும் பலர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் நிகழும்போதுதான் ஒரு பாடலாசிரியருக்கு முழுமையான திருப்தி உண்டாகும்.’ என்றார் உற்சாகத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.