பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின் தற்போதைய காதலி கௌரி ஸ்ப்ராட், அவரது முதல் மனைவி ரீனா தத்தா, அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் மற்றும் அவரது பிள்ளைகள் ஜுனைத் கான், இரா கான் மற்றும் ஆசாத் ராவ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இர்ஃபான் பதான் பதிவிட்ட காணொலியில், ஆமிர் கான் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதையும், அங்கு கூடியிருந்தவர்கள் அவரை உற்சாகப்படுத்துவதையும் காணலாம்.
பின்னர் ஆமிர் கான் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் கேக் துண்டுகளை ஊட்டினார். முதல் துண்டை தனது மகன் ஆசாத்துக்கும், அதைத் தொடர்ந்து அவரது மகள் இராவுக்கும், பின்னர் கௌரி ஸ்ப்ராட்டுக்கும் ஊட்டுகிறார்.
காணொலியைப் பகிர்ந்து கொண்ட இர்ஃபான் பதான், மனநலத் துறையில் இரா கானின் பணியைப் பாராட்டி எழுதி இருக்கிறார்.
அதில், “ஆமிர் பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஈரா கான் அகட்சு அறக்கட்டளை மூலம் மனநலம் குறித்த விழிப்புணர்வையும் ஆதரவையும் பரப்பி, மேலும் பல பயனுள்ள பணிகளைச் செய்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறந்தநாள் விழாவில் நடிகர் விக்கி கெளஷல், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா, தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிறந்த நாளையொட்டி ஆமிர் கானும் கௌரி ஸ்ப்ராட்டும் ஒன்றாக வெளியே வந்தபோது புகைப்படக் கலைஞர்கள் அவர்களை போஸ் கொடுக்கச் சொன்னபோது, இருவரும் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்காகச் சிறிது நேரம் நிற்கிறார்கள்.
இம்முறை பிறந்தநாளை ஆமீர்கான் எளிமையாகக் கொண்டாடியதால் சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. தற்போது ஆமீர் கான் தனது மகன் ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தீன் படத்தை மே ஒன்றாம் தேதி திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.