"வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்.." – சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்!

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது.

இங்கு, சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சி.வி. சண்முகத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சிவி சண்முகம்

அந்த அறிக்கையில், “சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கட்சிகள் எப்படி கொள்கைரீதியாக வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது.

ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரியை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.

மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது, விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது, நடுத்தர வர்க்க பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

நடிகர் சங்கத்தின் அறிக்கை
நடிகர் சங்கத்தின் அறிக்கை

அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்.

இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம்… தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்….” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.