விஜய்காக ஜீவா எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'; கங்கனாவின் நட்பு – போஸ் வெங்கட் சொல்லும் 'தாம் தூம்'

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா இயக்கத்தில் ரவி மோகன், கங்கனா ரணாவத் நடித்த ‘தாம் தூம்’ படம், பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.

கடந்த 2008ல் வெளியான இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் அறிமுகமானார். தவிர, ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், ‘பிதாமகன்’ மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் படத்தின் பாடல்கள் இப்போதும் கேட்க தூண்டும்.

கங்கனா
கங்கனா

மொழி தெரியாத தேசத்தில், உயிர் பிழைக்க ஓடும் தமிழ் இளைஞனை மையமாகக் கொண்ட கதைதான் ‘தாம் தூம்’. டாக்டர் ரவி மோகனுக்கு, காதலி கங்கனா ரணவத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. உலக மருத்துவர்களின் கலந்தாய்வுக்காக ரஷ்யா கிளம்புகிறார் ரவி.

போன இடத்தில் மாடல் பெண் மரியாவோடு நட்பு. மரியா மர்மமாகக் கொலையாகிறார். கொலைப் பழி ரவி மீது விழுகிறது. போலீஸ் கஸ்டடியிலிருந்து தப்பிக்கும் ரவியை, போட்டுத்தள்ளத் துரத்துகிறது ஒரு மர்ம கும்பல். உயிர் தப்பினாரா, இந்தியா திரும்பினாரா, காதலியைக் கைபிடித்தாரா..? விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்!

இந்தப் படத்தில் ஹீரோயின் கங்கனாவின் மாமாவாக வருகிறார் போஸ் வெங்கட். ‘தாம் தூம்’ நினைவுகள் குறித்து கேட்டதும் முகம் மலர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

ரவி, ராய்லட்சுமி
ரவி, ராய்லட்சுமி

“கே.வி.ஆனந்த் சாரும், ஜீவா சாரும் உண்மையிலேயே சினிமா மிஸ் பண்ணின ஜாம்பவான்கள். அவங்க ரெண்டு பேருமே ஒளிப்பதிவாளர்களாக இருந்தாலும் டைரக்ஷன்ல பெருசா கலக்கிடணும்னு ஆசை இருந்தது. எனக்கு ‘தாம் தூம்’ பட வாய்ப்பு எதிர்பாராமல் கிடைச்சதுனுதான் சொல்லணும்.

ஏன்னா, ரவி மோகன் சாரோட ‘தீபாவளி’யில் நடிக்கும் போதுதான் என்கிட்ட அவர் ‘தாம் தூம்’ படத்தின் பூஜைக்கான அழைப்பிதழைக் காட்டினார். ஆனா, அந்தப் படத்துல நான் நடிப்பேன்னு நினைக்கல. அதன்பிறகு ஒரு படத்தின் ஆடிஷனுக்குப் போயிருந்தேன். அந்தப் படத்துக்காகத்தான் ஜீவா சார் என்னை கூப்பிட்டிருந்தார்.

தாம் தூம் படம்
தாம் தூம் படம்

அப்புறம்தான் எனக்கு அது ‘தாம் தூம்’ படத்துக்கான ஆடிஷன்னு தெரிஞ்சது. ‘தீபாவளி’ படப்பிடிப்பில் நான் ‘தாம் தூம்’ படத்துல நடிக்கற விஷயத்தைச் சொன்னதும் ரவி சாருக்கும் ஆச்சரியம். என்னோட போர்ஷன் எல்லாம் பொள்ளாச்சியில்தான் எடுத்தாங்க.

அதன் பிறகு தான் ரஷ்யா படப்பிடிப்புக்குக் கிளம்பினாங்க. இதுல சோகமான ஒரு விஷயம், ரஷ்ய படப்பிடிப்பில்தான் ஜீவா சார் இறந்தார். எல்லாருமே அதிர்ச்சியானோம். ஏன்னா, கிளைமாக்ஸ் படமாக்கப்படாமல் இருந்தது. பாடல் காட்சிகளின் சின்னச் சின்ன காட்சிகள் படமாக்க வேண்டியிருந்தது. அதையெலாம் பி.சி.ச்ரிராம் சார் எடுத்தார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் கூட பி.சி.ஸ்ரீராம் சாரோட மேற்பார்வையில் எடுத்துதான் மீதி படத்தை முடிச்சாங்க. படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துடன் காம்பினேஷன் காட்சிகள் இருந்தாலும் பொள்ளாச்சியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு நானும், அவங்களும்தான் ஒரே காரில் பயணம் செய்திருக்கோம். அதன்பிறகு நல்ல நட்பானாங்க. நிறைய முறை அவங்ககிட்ட பேசியிருக்கேன். ரொம்ப எளிமையா பழகுவாங்க.

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்

இதுல சர்ப்ரைஸான விஷயம், சாய் பல்லவி. ஹீரோயின் கங்கனா ரணாவத்தின் தங்கையாக நடிச்சிருந்தாங்க. அப்ப ஷூட்டிங்கிற்கு சாய் பல்லவி, அவங்க அம்மா, தங்கையோட வருவாங்க. எல்லோருமே நல்லா பழகிட்டோம். சமீபத்துல நடந்த கலைமாமணி விருது விழாவில் கூட சாய் பல்லவியிடம் பேசினேன். அவங்க ரொம்ப ஹேப்பி.

இந்தப் படத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் சார் வசனம் எழுதியிருப்பார். படப்பிடிப்பில் அவர், ஜீவா சார், நான் எல்லோருமே பிரேக்கில் மரத்தடியில் பேசிட்டு இருக்கும்போது ஜீவா சார் ஒரு விஷயம் சொன்னார். அவர் விஜய் சாருக்காக ‘உலகம் சுற்றும் வாலிபன்’னு ஒரு கதை எழுதியிருக்கேன் என்றும் அதை படமா பண்ண போறதாகவும் ஜீவா சொன்னார். அந்த விஷயம் எஸ்.ரா. சாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். ஆனா, ஜீவா சார் அந்தக் கதையை விஜய் சாருக்குச் சொன்னாராங்கறது எனக்கு தெரியல. ஆனா அவருக்கு அப்படியொரு மிகப்பெரிய ஆசை இருந்தது.” என்கிறார் போஸ் வெங்கட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.