தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" – பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

Then Sudare Song - Lyricist Mohan Rajan
Then Sudare Song – Lyricist Mohan Rajan

இன்றையப் பகுதிக்கு, ‘லவ்வர்’ படத்தில் வரும் ‘தேன் சுடரே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மோகன் ராஜனிடம் பேசினோம். அத்தனை வலிகளை உள்ளடக்கிய இந்தப் பாடல், இளைஞர்களின் சார்ட்பஸ்டராக இன்றும் தொடர்கிறது. இந்தப் பாடல் பற்றி பேசுவோம் என்றதும் பூரிப்புடன் பேசத் தொடங்கினார் மோகன் ராஜன்…

தேன் சுடரே குறித்து மோகன் ராஜன், “லவ்வர் படம் முழுக்க வலிகள்தான் நிறைந்திருக்கும். படத்தின் ஒவ்வொரு பாடலும் வலியை ஆழமாகச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஒரு டீ கடையில் வைத்து இயக்குநர் பிரபுராம் எனக்கு இந்தக் கதையைச் சொன்னார்.

அவர் கதையைச் சொன்னதும் நான், ‘எனக்கு பிடித்த உன்னை, எங்கு நீ தொலைத்தாய், உனக்கு பிடித்த என்னை, ஏன் கலங்க வைத்தாய்’ என்கிற வரியை எழுதிவிட்டேன். பிறகு ஷான் ரோல்டனிடம் இந்த வரியைச் சொல்லி முடித்ததும் கம்போஸிங் செய்ய தொடங்கினார்.

Then Sudare Song - Lyricist Mohan Rajan
Then Sudare Song – Lyricist Mohan Rajan

இயக்குநர் பிரபுராம், எழுத்தாளர் மௌனியின் ரசிகர். அப்படி அவர் படித்ததிலிருந்து தேன்சுடரே என்கிற வரியைச் சொன்னார். அந்த வரியைப் பழையதாக இருக்கிறது எனக் கூறி, பாட்டிற்குள் இதை அமைக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தோம். அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தே நடந்தது எனச் சொல்லலாம்.

இந்தப் பாடலுக்கான டியூனுக்குப் பல வெர்ஷன்கள் முயன்றோம். அப்படி இரண்டாவது வெர்ஷனில்தான் எங்களுக்கு பாடலில் அமைந்திருக்கும் அந்த ஹம்மிங் கிடைத்தது. பிறகு, பல்வேறு பஞ்சாயத்துகளுக்குப் பிறகு தேன் சுடரே என்கிற வார்த்தையை பாடலுக்குள் சேர்த்துவிட்டோம்.

மீண்டும் ஒரு நாள் கம்போஸிங்கில் இயக்குநர், ”எனக்கு பிடித்த உன்னை, எங்கு நீ தொலைத்தாய், உனக்கு பிடித்த என்னை, ஏன் கலங்க வைத்தாய்’ என்கிற வரியை நீக்கிவிடலாம் என்றார். பாடலில் இந்த வரி இருந்தால்தானே முழுமை ஆகும் என ஷான் ரோல்டனிடம் சொன்னேன்.

அவர் இந்த வரியை வைத்துவிடலாம் என எனக்கு உறுதி தந்தார். பிறகு இந்தப் பாடலை முழுமையாக கம்போஸ் செய்த பிறகு பிரதீப் குமார் முதலில் பாடினார். பிரதீப் குமார், முழுமையாகப் பாடிய வெர்ஷன் எங்களுக்கு அலாதியான சுகத்தைத் தந்தது. பிறகு, மற்றொரு வெர்ஷன் பாடுவதற்கு ஷக்தி ஶ்ரீ கோபாலன் வந்தார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன்
பாடலாசிரியர் மோகன் ராஜன்

இரவு 10 -11 மணிக்கு இப்பாடலின் ரெக்கார்டிங் முடிவடைந்துவிட்டது. அவர் பாடிய பிறகு இந்தப் பாடலை நாங்கள் அனைவரும் அமர்ந்து கேட்டோம். முழுவதுமாக பாடலைக் கேட்டு முடித்ததும், நாங்கள் அனைவரும் அப்படியே உறைந்து போய் அமர்ந்துவிட்டோம். பேரலை அடித்தது போன்ற உணர்வு எங்கள் அனைவருக்குள்ளும் இருந்தது.

12 மணிக்கு இந்தப் பாடல் பற்றி நாங்கள் பேசத் தொடங்கி, அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பாடல் கொடுத்த பெரும் தாக்கத்தோடு, ஸ்டுடியோவை விட்டு நான் கிளம்பினேன். வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும்போதே, இதைப் பற்றி யாரிடமாவது பேசிவிட வேண்டும் என்கிற ஆவலில் இசையமைப்பாளர் சித்து குமாருக்கு ஃபோன் செய்து, இந்தப் பாடல் பற்றி அவ்வளவு சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால், இந்தப் பாடல் மெதுவாகத்தான் பிக் அப் ஆகி எல்லோருக்கும் பிடிக்கத் தொடங்கியது. எனக்கு இந்தப் படத்தில் ‘விலகாதே’ பாடல் மிகவும் பிடிக்கும். அதனை சித் ஶ்ரீராம் பாடியிருக்க வேண்டியது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது” என்றவர், “படம், ஓடிடி-யில் வெளிவந்த பிறகு பெரியளவில் ‘தேன் சுடரே’ பேசப்பட்டது. அப்போது இந்தப் பாடலைக் கொண்டாடி, பல விஷயங்கள் இந்தப் பாடல் பற்றி எழுதினார்கள்.

அப்போது பாடலாசிரியராக எனக்கு அத்தனை திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ‘எனக்கு பிடித்த உன்னை, எங்கு நீ தொலைத்தாய்’ என்கிற வரியைக் குறிப்பிட்டு எப்படி இதை நீங்கள் எழுதினீர்கள் என ஷக்தி ஶ்ரீ கேட்டார்.

Then Sudare Song - Lyricist Mohan Rajan
Then Sudare Song – Lyricist Mohan Rajan

அந்தக் கேள்வியே என்னை நெகிழ வைத்துவிட்டது. (சிரித்துக் கொண்டே…) எனக்காகப் பலர் மீம்ஸ்களைப் பதிவிட்டார்கள். என்னையும் ஷான் ரோல்டனையும் பிடித்து ஜெயிலில் போடுங்கள் என்பது போன்ற ஜாலியான கமெண்ட்களும் இந்தப் பாடல் பற்றிய நினைவுகளில் எனக்கு நெருக்கமானது.

‘கனவே கனவே’ பாடலுக்குப் பிறகு ஒரு பாடலாசிரியராக எனக்கு அங்கீகாரத்தைத் தேடித் தந்த பாடல் இது. ஒரு பாடல் வெற்றியடைவது என்பதைத் தாண்டி அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டியதும் முக்கியமாகக் கருதுகிறேன்” என முடித்தார் மன நிறைவுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.