ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் சம்பளத்தில் 50 சதவீதம் 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும்.

இதுதவிர துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் நிறுத்தி வைக்கப்படும். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அரசு துறை தலைவர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் நிறுத்தி வைக்கப்படும். மாநில தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர்கள். டிஜிபி, ஏடிஜிபி-க்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகளுக்கு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ஐஜிபி-க்கள், டிஐஜிக்கள், எஸ்பி-க்கள் மற்றும் பிற வனத்துறை அதிகாரிகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். குரூப் ஏ மற்றும் பி பிரிவில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தில் 3 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதேசமயம் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. நீதித்துறையின் அரசியலமைப்புச் சுதந்திரத்தை மதிக்கும் வகையில், உயர் நீதிமன்றத்திற்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அதன்படி, நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் தாமாக முன்வந்து ஆறு மாத காலத்திற்குத் தங்கள் ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிடித்தம் செய்ய பரிசீலிக்கவேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதிகள் 30% சதவிதத்தையும், மாவட்ட நீதிபதிகள் 20% சம்பளத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு நீதித்துறைகள் 3 சதவீத சம்பளத்தையும் தாங்களாக முன்வந்து 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க அரசிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னதாக முதல்வர் சுக்விந்தர் சிங் தனது 4வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுக்விந்தர் சிங் தனது நான்காவது பட்ஜெட்டில், 2025-26 நிதியாண்டில் ரூ.54,928 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். முதன்மையாக வருவாய் பற்றாக்குறை மானியம் நிறுத்தப்பட்டதாலும், மாநிலத்தின் அதிகரித்து வரும் கடன் சுமையாலும், முந்தைய நிதியாண்டில் இருந்து 3,568 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.51ல் இருந்து ரூ.61ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.61ல் இருந்து ரூ.71ஆகவும் அரசு உயர்த்தி இருக்கிறது. சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் மீது வரியை அறிவித்துள்ளது. இதன் படி லிட்டருக்கு ரூ.5 வரி வசூலிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.