நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ – புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தி.மு.க தனித்தனியே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதில் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் `ஏ’ மற்றும் `பி’ படிவங்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

புதுச்சேரி திமுக – காங்கிரஸ்

அதேபோல வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து தி.மு.க முறையிட்டதும், தங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் வாங்குமாறு கூறியது காங்கிரஸ். ஆனால் அந்த ஆறு தொகுதிகளிலும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் போட்டி வேட்பாளர்கள் `மூவ்’, தி.மு.க-வையும் வி.சி.க-வையும் உஷ்ணமேற்றியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, `புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அங்கு கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ், தி.மு.க போட்டியிடும் 5 தொகுதிகளில் வாபஸ் பெறுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஃபிரண்ட்லி ஃபைட் என்ற பெயரில் நீங்களும் நில்லுங்கள், நாங்களும் நிற்கிறோம். யார் வெற்றிபெறுகிறார்களோ பிறகு ஆட்சி அமைக்கும்போது ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்ற வாதங்களையும் அவர்கள் முன்வைப்பதாக கேள்விப்படுகிறோம்’ என்று கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

மேலும் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியையும் சேர்த்து மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருக்கிறது வி.சி.க. காங்கிரஸ் தலைமை தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுமாறு கூறி வருகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

மங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ரகுபதி, “என்னுடைய வேட்பு மனுவை நான் வாபஸ் பெற மாட்டேன். பீகாரில் சில தொகுதிகளில் எப்படி நட்பு ரீதியில் போட்டியிட்டார்களோ, அதேபோல புதுச்சேரியிலும் நாங்கள் போட்டியிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு நாளை 26.03.2026 அன்று கடைசி தினம் என்பதால், புதுச்சேரி காங்கிரஸ் தரப்பில் `பேச்சுவார்த்தை’ நடத்தி வருகிறது தி.மு.க. அதேபோல, “காங்கிரஸ் தரப்பில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் எம்.எல்.ஏ வைத்தியநாதன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.