ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார். அதனால், இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், “மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ளதால், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடைவெளியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கையிருப்புத் திறன் 74 நாள்களாக உள்ள நிலையில், தற்போது 60 நாள்களுக்குத் தேவையான உண்மையான இருப்பு கைவசம் உள்ளது. இதில் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நிலத்தடி குகைகளில் சேமிக்கப்பட்டுள்ள அவசர கால இருப்புக்களும் அடங்கும். இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருவதால், எரிபொருள் ஓட்டம் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை.

சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதே தவிர, அது உண்மையான தட்டுப்பாட்டால் ஏற்பட்டது அல்ல. உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது தினசரி தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான எல்பிஜி சரக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு என்பது தட்டுப்பாட்டுக்கான மாற்று அல்ல. அது தூய்மையான எரிசக்தியை நோக்கிய நீண்ட காலத் திட்டம். எனவே, இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பற்றாக்குறை குறித்துத் தவறான காணொளிகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.