இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் – viral video

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில், நாய் இறைச்சி கடைக்காக கடத்திச் செல்லப்பட்ட ஏழு வளர்ப்பு நாய்கள், ஓடும் லாரியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, சுமார் 17 கிலோமீட்டர் தூரம் ஒன்றாகவே பயணித்துத் தங்களது கிராமத்திற்குத் திரும்பியுள்ளன.

இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் வரிசையாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 16-ம் தேதி, ஒரு நாய் இறைச்சிக் கடையைச் சேர்ந்த நபர்கள் இந்த நாய்களைத் திருடி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆனால், இடையில் அந்த லாரியில் இருந்து தப்பித்த இந்த நாய்கள், வழி தெரியாத நிலையிலும் ஒன்றுக்கொன்று துணையாக நின்றபடி தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கின.

இதில் ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், லாப்ரடார் மற்றும் கோர்கி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் கூட்டமாகச் செல்வதைப் பார்த்த லூ என்ற நபர், அவற்றிற்கு உதவ முயன்றார். ஆனால், அந்த நாய்கள் எதற்கும் நிற்காமல் தங்களது இலக்கை நோக்கி உறுதியாகச் சென்றன. நாய்களின் நடமாட்டத்தைக் கவனித்த தன்னார்வலர்கள், அவை பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்தனர்.

இந்த நாய்கள் அனைத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவை என்றும், அவை எப்போதும் ஒன்றாக விளையாடும் பழக்கம் கொண்டவை என்பதால் இவ்வளவு தூரம் பிரியாமல் ஒன்றாகவே பயணித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக 17 கி.மீ தூரம் அலைந்து திரிந்த இந்த நாய்கள், இறுதியாக மார்ச் 18 அன்று தங்கள் கிராமத்தை அடைந்து உரிமையாளர்களிடம் சேர்ந்தன. ஒரு நாய் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

சீனாவில் நாய் திருடுவது ஒரு குற்றச் செயலாகும். இந்தச் சம்பவம் விலங்குகளின் அறிவுத்திறனையும், அவற்றுக்கு இடையே உள்ள பிணைப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.