விருதுநகர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்: 1,400 ஆண்டுகள் பழைமை; நோய் தீர்க்கும் தலம்!

ஈசன் திருவிளையாடல்கள் புரிந்த தலங்கள் ஏராளம். ஈசனே தாயாக வந்து பிரசவம் பார்த்த திருவிளையாடல் நிகழ்ந்த தலம் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில். அதே போன்று ஈசன் அற்புதங்கள் நிகழ்த்திய தலங்கள் ஏராளம் உள்ளன. அப்படி ஒரு தலம் தான் மடவார்வளாகம். மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திரையரங்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயில்.

இத்தலத்தில் ஈசன் வன்னி மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்துவந்தார். ஒருமுறை நிறைமாத கர்ப்பவதியான ஒருத்தி சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தனியாகத் தன் சொந்த ஊருக்குப் பயணப்பட வேண்டியிருந்தது. ஆனால் அவளால் நடக்க இயலவில்லை. வலி அதிகரித்தது. தாகம் வாட்டியது. அப்போது வன்னிவனநாதர் நினைவுக்குவர, ‘சுவாமி என்னைக் காப்பற்றுங்கள்’ என்று சொல்லி வாய்விட்டு அழுதாள். தாயுள்ளம் கொண்ட ஈசன் சும்மா இருப்பாரா… அந்தப் பெண்ணின் தாய்வடிவிலேயே வந்து அவளைத் தாங்கிப்ப்டித்துப் பிரசவமும் பார்த்தார். அந்தப் பெண் தாகம்… தாகம் என்று சொல்ல நிலத்தைக் கீறி நீரை வரவழைத்து அவளுக்குக் கொடுத்து அருளினார். தாகம் தீர்த்து அவள் சுயநினைவுக்கு வந்ததும் ஈசன் மறைந்தார். வந்தது ஈசனே என்பதை அறிந்து ஊராரும் உறவினரும் சிலிர்த்தனர். ஈசன் மருத்துவச்சியைப் போன்று வந்து பெண்ணின் வலி தீர்த்ததால் அன்றுமுதல் வன்னிவனநாதருக்கு வைத்தீஸ்வரன் என்கிற திருநாமமும் ஏற்பட்டது.

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்

படிக்காசு அருளிய ஈசன் என்றால் திருவீழிமிழிலைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் இங்கேயும் ஈசன் படிக்காசு அருளி அற்புதம் நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்” எனக் கூறி அருளினார். மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி என்கிறார்கள் பக்தர்கள்.

அவற்றில் துர்வாச முனிவருக்கு சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணாமூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது ஆகியவை மிகவும் முக்கியமான திருவிளையாடல்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்

திருமலைநாயக்கருக்கு அருளிய ஈசன்

திருமலை நாயக்கருக்கு ஒருமுறை கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது இத்தலத்தின் மகிமையை அனைவரும் எடுத்துச்சொல்ல இங்கே வந்து ஈசனை வழிபட்டு சில நாள்கள் தங்கினாராம். சில நாள்களிலேயே நோய் குணமடைந்தது. இதனால் அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் ‘பல்லக்கு ஊர்வலத்தில்’ திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.

இத்தலத்தில் இருக்கும் மூன்று கை, மூன்று காலுடன் காட்சி தரும் ‘சுர தேவருக்கு’ மிளகு சார்த்தி வழிபட்டால் நாள்பட்ட காய்ச்சல், தலைவலி, தோல் நோய்கள் குணமாகும். அதைப்போல் தலத்தின் தீர்த்தத்திலிருக்கும் மீன்களுக்கு, உணவளித்தால் பூர்வீக பாவ சாபதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு.

சிவபெருமான் திருக்கோயில்

மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் ‘வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும்’ இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ‘ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும்’ காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாள்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.

இங்குள்ள அம்பாளை 7 அமாவாசைகள் விரதமிருந்து வழிபட்டால், குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வரவு செலவு கணக்குகளில் பிரச்னை இருப்பவர்கள், இக்கோயிலுக்கு வந்து ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ செய்தால் நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.