என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' – மதன் கார்க்கி | வரித்துணையே 13

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

Ennamo Edho - Madhan Karky
Ennamo Edho – Madhan Karky

இன்றைய பகுதிக்கு, ‘கோ’ படத்தில் வரும் ‘என்னமோ ஏதோ’ பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். இந்தப் பாடல்தான் பாடலாசிரியர் மதன் கார்க்கிகும் பெரிய வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தது எனலாம். இந்தப் பாடல் பற்றி அவர்…

மதன் கார்க்கி, “‘எந்திரன்’ படத்தின் ‘இரும்பிலே’ பாடலுக்குப் பிறகு என்னை பலருக்கும் அறிமுகப்படுத்திய பாடல் ‘கோ’ படத்தில் வரும் இந்த ‘என்னமோ ஏதோ’ பாடல்தான். உலகமெங்கும் இருக்கிற தமிழ் மக்களின் இல்லங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பாடல். அதனாலேயே இந்தப் பாடல் எனக்கு ஸ்பெஷல். காதல் பாடலுக்கான வழக்கமான சூழல்தான் இந்தப் பாடலுக்கும் எனக்கு சொல்லப்பட்டது. கே.வி. ஆனந்த் சார் எனக்கு விஷூவலில் என்னென்ன விஷயங்கள் கொண்டு வரப் போகிறார் என்பதை எனக்கு முன்பே தெளிவாகச் சொல்லிவிட்டார். அது நான் வரிகளை எழுதுவதற்கும் உதவியது எனலாம்.

Madhan Karky
Madhan Karky

விஷூவல்களில் என்ன காண்பிக்கப் போகிறார் என்பதை ஒவ்வொன்றாக நுட்பமாக எனக்கு சொன்னார். கதாநாயகன் ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால் இந்தப் பாடலை ஜர்னலிசம் களம் சுற்றியே எழுதினேன். ஃபோட்டோகிராஃபர்கள் அவுட் ஆஃப் ஃபோகஸ் என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள். அதனை தமிழில் எப்படி குறிப்பிடுவது என ஆராய்ச்சி செய்தேன். பிறகு அதற்கான வார்த்தையை கண்டுபிடித்து, இந்த உலகமே ஃபோகஸ் இல்லாத ஒரு காட்சிதான் என்பதை சொல்லும் வகையில் ‘குவியமில்லா ஒரு காட்சி பேழை’ என்கிற வரியை எழுதினேன். இந்த வரியை வைத்துதான் முதல் வெர்ஷனை எழுதியிருந்தேன்.

இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’ என்றார்.

Ennamo Edho - Madhan Karky
Ennamo Edho – Madhan Karky

அவர் எப்போதுமே வார்த்தைகளின் சவுண்டை கவனித்து பாராட்டுவார். பிறகு ‘அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்’ என்பது போன்ற வரிகளை ஜர்னலிசன் களத்தை சுற்றியே எழுதினேன். இதைக் கேட்கும்போது, ப்ரஸ்ஸுக்குள் நடக்கும் காதல் கதை நினைவிற்கு வரவேண்டும். அது இந்தப் படத்தையும் நினைவூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்தப் பாடலை முழுமையாக எழுதினேன்.” என்றார்.

“மக்களும் இந்தப் பாடல் கேட்டப் பிறகு குவியம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தேடினார்கள். என்னிடமும் அதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். காதல் பாடல்கள் எழுதுவது எப்போது சவால்தான். காதல் பாடல்களுக்கு முதலில் சூழலை முழுமையாக புரிந்துக் கொள்வேன். எவ்வளவு விரிவாக சூழல் சொல்லப்படுகிறதோ, அவ்வளவு ஆழமாக என்னால் அதற்குள் செல்ல முடியும். முக்கியமாக, கூறியது கூறல் என்பதை தவிர்க்க வேண்டும். காதல் பாடல் என்றதும், நிலா, பூ, வாசம் என்பது போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகள் வந்துவிடும்.

Madhan Karky
Madhan Karky

அவை இல்லாமல் அதனை கட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு பாடல் எழுதும்போது, அதன் சூழல் சார்ந்து என்ன விஷயங்கள் புதியதாக கொண்டு வர முடியும் என யோசிப்பேன். எனக்கும் அதிகமாக காதல் பாடல்கள்தான் வந்திருக்கிறது. எனக்கும் அது கம்ஃபோர்டான ஜானர். அதே சமயம் கஷ்டமானதும் அதுதான். ஒவ்வொரு முறையும் புதியதாக எனச் சொல்லிவிடப் போகிறோம் என்கிற யோசனைதான் வரும். யாரும் பார்த்திடாத பார்வையில் அந்தக் காதலை நாம் எப்படிக் கொண்டு வரலாம் என்பதைதான் நான் யோசித்து எழுதுவேன்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.