கரூர் மாவட்டம், குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம் : மாலை சாத்தி வழிபட்டால் திருமண வரம் நிச்சயம்!

வடக்கு பார்த்த ஈசனின் சந்நிதிகள் அபூர்வம். அப்படிப்பட்ட சந்நிதிகளில் வழிபட்டால் முக்தி கிட்டும். வாழ்வில் உள்ள பிணிகள் நீங்கும். செல்வ வளம் சேரும். வினைப்பயன்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு உண்டாகும். அப்படி ஒரு சந்நிதிதான் காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசிக்கு இணையான ஆலயங்கள் பல தமிழகத்தில் உள்ளன என்கின்றன ஞான நூல்கள். அவற்றில் ஈசனின் லிங்கத் திருமேனி வடக்கு திசை நோக்கி அருளும் ஆலயமாகத் தீகழ்கிறது குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில்.

திருச்சியிலிருந்து கரூர் தேசிய நெடுஞ்சாலையில், குளித்தலை நகரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கடம்பவனேஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற 127 காவிரித் தென்கரைத் திருத் தலங்களில் ஒன்று இந்த ஆலயம். இங்கே ஈசன் `பாலகுஜாம்பிகை சமேத கடம்பவனேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம்

ஆதியில் கடம்ப மரங்கள் சூழ்ந்த காடாகத் திகழ்ந்ததால், இந்த ஊருக்குக் `கடம்பூர்’ என்றும் இங்குள்ள ஈசனுக்கு, `கடம்பவனேஸ்வரர்’ என்னும் திருநாமம் உண்டானது. மேலும், கடம்பந்துறை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலை, கல்யாணபுரி என்று பல்வேறு பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. இதில் குழித்தண்டலை என்பதே மருவி தற்காலத்தில் குளித்தலை ஆயிற்று.

`சோமகாசுரன்’ என்ற அசுரன் நான்கு வேதங்களையும் கவர்ந்து கடலுக்குள் ஒளித்து வைத்தான். அதை மீட்கப் புறப்ப மகாவிஷ்ணு இத்தலம் வந்து கடம்பவனேஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றார். பின்பு மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார் என்கிறது தலபுராணம்.

பிரம்மன் ஒருமுறை ஈசனை நோக்கித் தவம் செய்தபோது,

“பூவுலகில் சத், சித் என்னும் இரண்டு மலைகளுக்கு நடுவே ஓடும் காவிரி நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் என் சந்நிதிக்கு வந்து காவிரி நீர் கொண்டு என்னை அபிஷேகித்து வந்தால் நீ விரும்பும் வரம் கிடைக்கும்” என்றார் ஈசன்.

அதன்படியே இங்கு வந்த பிரம்மன், ஈசனை வணங்கி வழிபட்டு அருள்பெற்றார். அதன்பின் கலியுகம் உள்ளமட்டும் மக்கள் பயன்பெறும் வண்ணம் அந்த இடத்திலேயே ஓர் ஆலயம் எழுப்பி அதில் ஈசனையும் அம்பிகையையும் பிரதிஷ்டை செய்து தேர்த்திருவிழாவும் நடத்தினார் என்கிறது தலபுராணம். பிரம்மன் எழுப்பிய ஆலயம் இது என்பதால் இதற்கு `பிரம்மபுரி’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.

குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம்

இப்படிப் புராணச் சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆலயத்தினுள் நுழைந்தால் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மூலவர் கருவறையில் கருணாமூர்த்தியாக கடம்பவனேஸ்வரர் லிங்கவடிவில் அருள்கிறார். அந்த ஈசனை வணங்கியதும் நம் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் தீர்கின்றன.

இரண்டாம் பிராகாரத்தில் மேற்கே வலப் பக்கம் அம்பிகையின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருளும் அம்பிகைக்கு, `முற்றிலா முலையம்மன் (பாலகுஜாம்பிகை) என்பது திருநாமம். இங்கு அம்பிகைக்கு ஆடிப்பூர நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். நவராத்திரி உற்சவமும் களைகட்டும். ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை விசேஷம்.

உட்பிராகாரத்தின் வடக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு இரண்டு நடராஜ மூர்த்தங்கள் உள்ளன. சிவகாமி அம்மையும் மாணிக்கவாசகரும் உடன் அருள்பாலிக்கிறார்கள். நடராஜ மூர்த்திகளில் ஒருவர் முயலகனை மிதித்த திருக்கோலத்திலும், மற்றொருவர் முயலகன் இன்றியும் காட்சி கொடுப்பது விசேஷம்.

மேலும் பிராகாரத்தில் விசுவநாதர், விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஜேஷ்டாதேவி, நால்வர், அறுபத்துமூவர், சேக்கிழார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம்

இத்தலம் வரும் பக்தர்கள், அதிகாலையில் இங்கு கடம்பவனேஸ்வரரை வழிபட்டு மதியம் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்து மாலையில் ஈங்கோய் மலை சென்று திருஈங்கோய் நாதரை வணங்க வேண்டும் என்பார்கள். அவ்வாறு மூன்று ஈசரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் முக்திப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும், தேவசன்மர் என்ற மகரிஷிக்கு சுவாமி திருமணக் கோலம் காட்டி அருளிய தால் இது திருமணத் தலமாகவும் கருதப் படுகிறது. இங்கு வந்து சுவாமிக்கு மாலை சாத்தி வழிபாடு செய்துகொண்டால் விரைவில் திருமண யோகம் கைகூடும். மேலும் தொடர்ந்து 11 வாரம் திங்கட்கிழமைகளில் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை செய்தால் சகலவிதமான பாவங்களில் இருந்தும் விமோசனம் அடையலாம். வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.