'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில் நேரடியாக களமிறங்குகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் தொகுதி மாறவில்லை. தவெக சார்பில் விஜய் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், விஜய் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் எதிராக ‘மாற்றுக்கட்சி சீனியர்’களை இறக்க திட்டமிட்டிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

TVK Vijay - விஜய்
TVK Vijay – விஜய்

தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் சென்னைக்குள் இருக்கும் தொகுதிகளிலேயே களமிறங்குகின்றனர். விஜய் பெரம்பூரிலும் புஸ்ஸி ஆனந்த் தி.நகரிலும் ஆதவ் வில்லிவாக்கத்திலும் ராஜ்மோகன் எழும்பூரிலும் மரிய வில்சன் ஆர்.கே.நகரிலும் களமிறங்குகின்றனர்.

கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம் முக்கியமான தொகுதிகள் என்பதால் அங்கே யாரை நிறுத்தலாம் என ஆலோசனை தவெக முகாமில் தீவிரமாக நடந்திருக்கிறது. கொளத்தூர் தொகுதியை மனதில் வைத்து ஒரு தனியார் டிராவல்ஸ் உரிமையாளரும் மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கரூர் குடும்பங்களை அவரின் டிராவல்ஸ் பேருந்தில்தான் தவெக நிர்வாகிகள் சென்னைக்கே அழைத்து வந்தனர்.

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு

இக்கட்டான நேரத்தில் தனக்கு உதவியதால் விஜய் தன்னுடைய பெயரை முதல்வருக்கு எதிராக போட்டியிட டிக் அடிப்பார் என அவர் ஆவலோடு காத்திருந்தார். ஆனால், திடீரென அதிமுகவிலிருந்து முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு ஆதவ் லைனை பிடித்து தவெக முகாமுக்கு தாவினார். வடசென்னையில் கள அனுபவம் கொண்ட சீனியர் என்பதாலும் கொளத்தூர் தொகுதியில் தீவிரமாக வேலை பார்த்து வைத்திருப்பவர் என்பதாலும் வி.எஸ்.பாபு தொகுதியை எதிர்பார்த்தார். ஆதவ்வும் வி.எஸ்.பாபுவுக்கு சிபாரிசு செய்தார். மாற்றுக் கட்சியிலிருந்து வந்த பலருக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் சீட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஜய், டிராவல்ஸ் உரிமையாளரின் பெயருக்கு பதிலாக வி.எஸ்.பாபுவின் பெயரை டிக் அடித்திருப்பதாக பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

அதேமாதிரி, உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதிக்கும் சரியான கேண்டிடேட் வேண்டுமென்று விஜய் தரப்பு பல வாரங்களாக யாருடைய பெயரையும் டிக் அடிக்காமல் இருந்திருக்கிறது. மாவட்டச் செயலாளர் திலீப்பிடம் தலைமை எதிர்பார்க்குமளவுக்கு ‘வைட்டமின் ப’ இல்லாததால் வேறு சிலரை வேட்பாளராக்க முயன்றிருக்கிறார்கள்.

டி.செல்வம்
டி.செல்வம்

ஆனால், உதயநிதி தொகுதி என்பதால் பலரும் ரிஸ்க் எடுக்கவும் செலவும் செய்யவும் தயங்கியதாக கூறுகின்றனர் முக்கிய நிர்வாகிகள். இதனால் கடைசி வரை சேப்பாக்கம் தொகுதி மட்டும் டிக் ஆகாமலே இருந்திருக்கிறது. இந்நிலையில்தான் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் வெளியேறி தவெகவில் இணைந்த டி.செல்வத்திடம் சேப்பாக்கம் கார்டை நீட்டியிருக்கிறார்கள். கட்சியில் சேர்ந்தவுடனேயே இவ்வளவு முக்கியமான தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பா என்கிற ஆர்வத்தில் செல்வமும் உதயநிதியை எதிர்க்க ஓகே சொல்லிவிட்டதாக கூறுகின்றனர் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள்.

வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான கடைசி நிமிட வேலைகள் தேனாம்பேட்டை தவெக வார் ரூம் அலுவலகத்தில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இறுதி நேரத்தில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.