கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தளவாய் சுந்தரம், கிள்ளியூர் த.மா.க வேட்பாளர் நிவின் சைமன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வேளாண்மை, அடுத்தது மீன்பிடித் தொழில், பிறகு ரப்பர் தோட்டம் – இந்த மூன்றும்தான் மையமாக வைத்து இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு விவசாயியாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றேன்.
விவசாயம் என்பது கடினமான பணி. மீன்பிடித் தொழில் சாதாரண தொழில் அல்ல. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வீடு திரும்பினால்தான் அவர் நிச்சயம். அப்படிப்பட்ட ஆபத்தான மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருக்கின்ற மீனவர் நண்பர்கள், அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அ.தி.மு க ஆட்சியில் நிறைவேற்றிருக்கிறோம்.
இந்தப் பகுதியிலே ரப்பர் தோட்டம் அதிகமாக இருக்கின்றது. அதன் மூலமாக விவசாயப் பெருங்குடி மக்கள் அதைப் பயிரிட்டு இன்றைக்கு அதிலே வாழ்வாதாரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொழிலும் சிறக்க அ.தி.மு.க ஆட்சி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2017-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்திலே ஒகி புயல் தாக்கியது. உடனடியாக அந்தப் பாதிப்புள்ளான பகுதிகளை நாங்கள் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பாதிப்புக்குள்ளானவர்கள், மீனவ சமுதாயத்தில் இறந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமா கொடுத்தோம்.
சில பேர் காணாமல் போனார்கள், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு 18 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு அதற்கான நடவடிக்கை எடுத்தோம். 31,000 மீனவர்கள் வாழ்வாதார நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,500 ரூபாய் வழங்கினோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலக்கட்டத்தில்தான் கச்சத்தீவைத் தாரைவார்த்தது தி.மு.க அரசு.

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து அதிகமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு இடங்களிலே அரசு கலை கல்லூரியைக் கொடுத்தோம். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டில் தமிழ்நாட்டில் 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் கொடுத்தோம்.
21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகளைக் கொடுத்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட நான்கு ஆண்டுகளில் ஆறு சட்டக் கல்லூரிகளைக் கொடுத்து நம்முடைய ஏழைக் குடும்பத்திலே மாணவ மாணவியர்கள் சட்டம் பயிலக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்தது அ.தி.மு.க அரசு.
பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். ஆனால் தி.மு.க அரசு வந்ததும் நிறுத்தப்பட்டது.
இன்றைக்கு மக்களின் செல்வாக்கு இழந்த காரணத்தினால் அவசர அவசரமாகக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த லேப்டாப் தரமற்ற லேப்டாப் ஆக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வருகின்ற பொழுது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இதில் ஊழல் நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்காக அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். அதை இந்த ஆட்சியில் முடக்கிவிட்டார்கள். எங்கள் ஆட்சி வந்ததும் மீண்டும் அதே பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவங்கப்படும். இந்த ஆட்சியில் ஊழல் மட்டும் நிறைந்து இருக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தெளிவாகச் செய்கிறார்கள்.
இந்த ஐந்து ஆண்டு காலம் செய்த சாதனை இதுதான். ஸ்டாலின் எப்படியாவது உதயநிதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்பதற்குத்தான் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார். இது என்ன அரச பரம்பரையா? கருணாநிதி, ஸ்டாலின் பிறகு உதயநிதி.
அரச பரம்பரையில்தான் அதற்குப்பிறகு இளவரசர் வந்துகொண்டு இருப்பார்கள். அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை ஆளக்கூடியவர் இங்கிருக்கின்ற சாதாரண மக்களில் ஒருவராகத்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.

மீன்பிடித் தடைக்காலத்தில் 8,000 ரூபாய் கொடுப்பதை, 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏதாவது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தப் பிரீமியத்தை அரசாங்கமே செலுத்தும். கடலில் பாதிப்புக்குள்ளாகின்ற மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு மீனவர் மீட்புக்குழு மற்றும் இழுவை படகு வசதி ஏற்படுத்தப்படும்.
கடற்கரை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள் அதோடு அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் மீன்பிடி துறைமுகங்கள் அனைத்து வசதிகளும் உள்ளடக்கி அமைக்கப்படும். ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்படும்.
கடல் அரிப்பைத் தடுப்பதற்குத் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு மாதம் மாதம் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 500 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். மீனவ மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும்.
மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கின்ற பொழுது அவர்களுக்குச் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தி.மு.க ஆட்சியில் மக்கள் படுகின்ற துன்பத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, விலைவாசியை உயர்த்தி வதைக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மக்கள் படுகின்ற துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் அ.தி.மு.க ஆட்சி வந்தவுடனே வழங்கப்படும்” என்றார்.