`மணிவண்ணன் சார் ஒரு ஜீனியஸ்; ஆனா அவர்கிட்ட பிடிக்காத ஒரே விஷயம்…' – 'அமைதிப்படை' தயாரிப்பாளர்

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் ‘அமைதிப்படை’ படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. சத்யராஜ் ‘அமாவாசை என்கிற நாகராஜசோழன் MLA’ பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவரின் அலப்பறைகளும் அரசியல் நையாண்டிகளும் ‘அமைதிப்படை’யை இப்போது வரை கொண்டாட வைத்து வருகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புரொமோஷன் ஆனார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். சுந்தர்.சி.யின் ஆஸ்தான கேமராமேனான செந்தில்குமார், ‘அமைதிப்படை’யின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் அவரிடம் பேசினோம்.

“நான் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிச்சிருந்தாலும் கூட, சினிமாவை கத்துக்கிட்டது மணிவண்ணன் சார்கிட்டத்தான். அவர்கிட்ட ‘புது மனிதன்’, ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’னு சில படங்கள்ல உதவி இயக்குநராக இருந்தேன். அந்த சமயம் அவர்கிட்ட உதவி இயக்குநர்களாக சீமான் சார், சுந்தர்.சி., செல்வபாரதி, ராசு மதுரவன் என பலரும் இருந்தனர். என்னை ஒரு தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர் மணிவண்ணன் சார் தான். ‘அமைதிப்படை’யில் நானும் ஒரு தயாரிப்பாளர். நான் தயாரித்த ஒரே ஒரு படமும் இதுதான். அவர் ஒரு ஜீனியஸ்.

சத்யராஜ், மணிவண்ணன்

அந்த டைம்ல நான் மனோபாலா சார் இயக்கின ‘கறுப்பு வெள்ளை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துட்டு இருந்தேன். அதோட படப்பிடிப்பும், ‘அமைதிப் படை’யின் ஷூட்டிங்கும் பொள்ளாச்சி பகுதிகள்ல தான் நடந்திட்டு இருந்தது. அதனால மாசத்துல பாதிநாட்கள் ரெண்டு படப்பிடிப்பிலும் மாறி மாறியிருந்தேன். மணிவண்ணன் சாரோட ஞாபக சக்தி பிரமிக்க வைக்கும். ஸ்கிரிப்ட் நோட்டே அவர்கிட்ட இருக்காது. எல்லாமே அவர் மைண்ட்ல ஏத்தி வச்சிருப்பார். அவர் மைன்ட்ல எத்தனை கதைகள் இருக்கும். என்ன காட்சிகள் யோசிப்பார்னு எங்கள்ல யாருக்குமே தெரியாது. அப்படியொரு ஜீனியஸ் அவர். இன்னிக்கு என்ன சீன் எடுக்கப்போறார்னு அவருக்கு மட்டுமே தெரியும். 60 நாட்கள் படப்பிடிப்புல காலையில் படப்பிடிப்புக்கு கிளம்புவோம். சாயந்திரம் பேக்கப் ஆகிடும். அந்த 60 நாட்கள் போக அடுத்த 30 நாட்கள் ராத்திரியும், பகலுமாக எடுத்து மொத்த படத்தையும் முடிச்சிட்டார்.

யு.கே.செந்தில்குமார்

இந்த படத்தின் கதை உருவானதே எதேச்சையாக அவருக்கு தோணின விஷயம் தான். ‘ஒரு அப்பா சத்யராஜ் வர்றார்.. அப்பா தான் வில்லன்’ அப்படினு சின்னதா ஒரு லைன் சொன்னார். அதான் ‘அமைதிப்படை’யாக உருவாச்சு. ஒவ்வொரு சீனுமே திடீர் திடீர்னு அவர் யோசிச்சு எடுத்தது தான். ‘ஜோசியரை சத்யராஜ் சார் கொலை செய்யும் சீன்’ல நான் இருந்தேன். அதைப் போல சத்யராஜ் சிதறு தேங்காய் பொறுக்கற சீன்ல அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சத்யராஜ் சாரோட டயலாக் தான். அதைப் போல ஜட்டி துவைக்கற சீனை எடுக்கும் போது மொத்த யூனிட்டுமே சிரிச்சு மகிழ்ந்துட்டோம். சத்யராஜ் சாருக்கும் அவருக்குமான பாண்டிங் எல்லாருக்குமே தெரிஞ்சது தான்.

அமைதிப் படை

மணிவண்ணன் சார்கிட்ட பிடிச்ச விஷயங்களை பெரிய பட்டியல் போட்டே சொல்லலாம். உதவி இயக்குநர்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். என்ன தேவையோ அதெல்லாம் கொடுப்பார். ஆனா, அவர்கிட்ட பிடிக்காத விஷயம் ஒண்ணு இருக்கு. அவருக்கு கோபம் வந்தால் அடி வெளுத்து வாங்கிடுவார். அப்படி அவர்கிட்ட அடிவாங்கின எல்லாருமே வெற்றிகரமா இருக்காங்க. நானெல்லாம் அவர்கிட்ட கணக்கில்லாமல் அடிவாங்கியிருக்கேன். ஆனாலும் அவர்கிட்ட பணியாற்றியது ஒரு அழகான தருணம்னு தான் சொல்லணும். ‘அமைதிப்படை’ மாதிரி இன்னொரு படம் எடுக்கவே முடியாது. இப்ப உள்ள அரசியல் சூழலுக்கு ரொம்ப பொருத்தமா கனெக்ட் ஆகக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.