கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்தப் பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்தத் தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம்.

கரியர் எல்லாருக்கும் சில சமயங்களில் சிக்கலானதாக மாறும். எவ்வளவோ முயற்சி செய்தாலும், சம்பளம், அங்கீகாரம், பாராட்டுகள் எல்லாம் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் இருக்கலாம். சிலர் இந்த நிலையை நேரடி குறைபாடாக எடுத்துக்கொள்வார்கள். சிலர் மனமுடைந்து வேலையில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். ஒரு காரியம் செய்யும் போது அதற்கான மதிப்பும் பாராட்டும் இல்லையென்றால், அது ஒருவரின் மனநிலை, ஆர்வம், செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கும். இப்படியான ஒரு சிக்கலைப் பகிர்ந்து ஆலோசனை கேட்டிருக்கிறார் விகடன் வாசகர் ஒருவர்.
இனி வாசகர் சொல்வதை கேட்போம்.. “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். என் வேலையை நான் எப்போதும் நேரத்திற்கு முன்பாக முடிக்க முயற்சி செய்கிறேன். கொடுக்கப்படும் பொறுப்புகள் மட்டும் அல்லாமல், கூடுதலாக தரப்படும் வேலைகளையும் ‘இது எனக்கு ஒரு வாய்ப்பு’ என்று நினைத்து செய்து விடுவேன். என் டீம் உறுப்பினர்களுக்கு உதவுவது, டெட்லைன் காப்பது போன்ற விஷயங்களில் நான் எப்போதும் முனைப்பாக இருப்பேன்.
பெரிதாக விடுமுறைகள், பெர்மிஷன் எடுக்க மாட்டேன். விடுமுறை தினங்களில் கூட லேப்டாப்பை திறந்து அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருப்பேன். இதுவரை அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதேயில்லை. மாலை அலுவலக நேரத்திற்குப் பிறகும் சில மணி நேரங்கள் வேலை செய்து எல்லா பணியையும் முழு மனதுடன் செய்து விட்டு கிளம்புவேன்.

ஒரு வேலை செய்துவிட்டு, இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதில் எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை. மேலாளரிடம் சிரித்து சிரித்து பேசுவது, அவர் கொடுக்கும் பெர்ஷனல் வேலைகளைச் செய்வதையெல்லாம் நான் வழக்கமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், அலுவலக வேலைகளில் எந்த சமரசமும் செய்தது இல்லை. என் வேலையை நான் நூறு சதவிகிதம் பிடித்து செய்து வந்தேன்.
ஆனால், நான் என் பணி சார்ந்து எவ்வளவு முயற்சி செய்தாலும், என் வேலைக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகிறது. என்னுடன் சேர்ந்தவர்கள் சிலர் சின்ன வேலை செய்தாலும் மேலாளர்களிடமிருந்து பாராட்டு பெறுகிறார்கள். ஆனால் நான் செய்த வேலைகள் பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவில்லை. எனக்கு அடுத்து பணியில் சேர்ந்தவர்களின் வேலைகளை பெரிதாக அங்கீகரிக்கிறார்கள். சில முக்கியப் பணிக்கு அவர்கள் தான் செட் ஆவார்கள் என்று சில பணிகளை என் ஜூனியர்களிடம் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகளை கூட என் மேலாளர் அலட்சித்துடன் கையாள்கிறார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யார் என்னை பாராட்டாவிட்டாலும் என் உழைப்பு எனக்குத் தெரியும் என்ற மனநிலையில் இருந்தேன்.‘ஒரு நாள் கண்டிப்பாக என் வேலை மதிக்கப்படும்’ என்று நம்பினேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை குறைந்து வருகிறது. சில நேரங்களில் ‘நான் செய்யும் வேலையில் ஏதாவது குறை இருக்கிறதா?’ என்ற சந்தேகமும் வருகிறது. திறமை மீதும் சந்தேகம் வருகிறது. இந்த அலுவலகத்தில் நாம் தேவையில்லாமல் இருக்கிறோமா என்ற எண்ணம் மோலோங்கிறது. இதனால் வேலை செய்வதில் இருந்த ஆர்வமும் மெதுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? என் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்க என்ன மாற்றங்கள் செய்யலாம்? இல்லையெனில், இந்த சூழலிலிருந்து வெளியேறுவது தான் சரியான தீர்வா?”
இது குறித்து உளவியல் ஆலோசகர் ப்ரினுவிடம் பேசினோம்.
“நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக உழைக்கிறீர்கள். வேலை நேரத்திற்கு முன் பணி முடிப்பது, கூடுதல் பொறுப்புகளை ஏற்பது, டீம் நண்பர்களுக்கு உதவவது, விடுமுறையிலும் வேலை செய்வது என உங்களின் கடின உழைப்பை நீங்கள் கொடுக்கிறீர்கள். ஆனால்… ‘எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் வேலைக்கு பாராட்டு கிடைக்காத நிலை. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவில்லை’ என்று சொல்கிறீர்கள். இது பல அலுவலகங்களில் நடக்கும் ஒன்றுதான்.
எல்லா மேலாளர்களும் உழைப்பை அங்கீகரிப்பார்கள், அனைவரையும் சமமாக நடத்துவார்கள்,சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுவார்கள் என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஒவ்வொருவரின் தலைமைப் பண்பும் வெவ்வேறாக இருக்கும். விருப்பு, வெறுப்புகளும் வெவ்வேறாக இருக்கும்.

உங்களின் வேலை நேர்த்தி, அர்பணிப்பு, போன்றவை யாராலும் கவனிக்கப்படாத போது மனதில் சுயசந்தேகம், வருத்தம், மனஅழுத்தம், உருவாகி, வேலை செய்யும் ஆர்வம் குறைவது சாதாரணம். இதில் உங்களின் தவறு எதுவும் இல்லை.
Human Needs Theory – யின் படி மனிதர்களுக்கு அங்கீகாரம் (Esteem), வளர்ச்சி, பாராட்டு, ஆகியவை மிக முக்கியம். எவ்வளவு உழைத்தாலும் பாராட்டு இல்லாவிடில் ஊக்கம் குறையும். மேலும், Equity Theory சொல்லுவது போல் நான் எவ்வளவு உழைத்தாலும், மற்றவர்கள் குறைந்த முயற்சிக்கும் பாராட்டு பெறுகிறார்கள் என்ற உணர்வு வேலையில் உங்கள் வேகத்தை குறைக்கும். இது இயல்புதான். அதே நேரம் மேலாளரின் இயல்பை மாற்ற முடியாது என்பதும் நிதர்சனம்.
தீர்வு:
இப்படியான சூழலில் உங்களின் வேலை, நேரத்திற்கு வரும் குணம், நேர்மை ஆகியவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். அங்கீகாரம் இல்லாத நிலையில் மன அமைதி மிக முக்கியம்.
அலுவலகத்தில் மற்றவர்களிடம் உங்களின் பிரச்னைகளை சொல்லி புலம்பாதீர்கள். இது மேலாளரை இன்னும் எரிச்சலடையைச் செய்யலாம். மாற்றாக மேலாளர் அல்லது ஹெச். ஆரிடம் குற்றச்சாட்டு இல்லாமல் உங்கள் முயற்சிகளை சொல்லுங்கள். ‘நான் செய்த முயற்சி கவனிக்கப்படவில்லை’ என்று அமைதியான டோனில் வலியுறுத்துங்கள்.
உங்களின் பணிகள், சாதனைகள், டெட் லைன் போன்றவற்றை அட்டவணையிட்டு பராமரியுங்கள். இது அப்ரைசல் நேரத்தில் ஆதாரமாக விளங்கும்.
உங்களின் சீனியர்களிடம் கைடன்ஸ் பெற்று வளர்ச்சிக்கான புதிய யுத்திகளை உருவாக்குங்கள்.
உங்களின் கூடுதல் வேலை, பொறுப்பு, அலுவலக நேரத்திற்கு பின் உழைப்பது போன்றவற்றில் கால வரையறை நிர்ணயிப்பது நல்லது. உங்களை ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களின் பாராட்டுகளை விட, ‘நான் என் பணியை திருப்தியாக செய்கிறேன்’ என அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களை அப்டேட் செய்ய டெக்னிக்கலாக சில கோர்ஸ்கள் படிக்கலாம். அதை அலுவலகத்திலும் சொல்லலாம். உங்கள் கூடுதல் திறன்களை அடிக்கடி அலுவலகத்தில் சொல்வது நல்லது.
இத்தனைக்கும் பிறகும் சூழலை சமாளிக்க முடியாத நிலை இருந்தால் அலுவலகத்திலேயே வேறு டீம் ஏதேனும் மாற இயலுமா என்று வழி தேடலாம். அல்லது சில மாதங்களுக்குப் பிறகு புதிய அலுவலகம் , புதிய கரியருக்குத் திட்டமிட தொடங்கலாம்.
பாராட்டு இல்லாமல் இருப்பதற்கு கவலைப்படாமல் உங்கள் உழைப்பே உங்கள் அடையாளம் என்பதை மனதில் நிறுத்தி கரியரில் அடுத்தடுத்த அடி எடுத்து வையுங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது. அது உங்களை நிச்சயம் வழிநடத்தும்” என்று விளக்கினார்.
ஆல் தி பெஸ்ட்.
வாசகர்களே இந்தப் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…
வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். [email protected] என்ற மின்னஞ்சளுக்கு ‘பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!