பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது.

வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடியதால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் ஒருவர் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் கீழே விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர். எனவே ஏராளமான பெண்கள் ஆங்காங்கே மயங்கி கிடந்தனர்.

எங்கும் கூச்சல் குழப்பமாக இருந்தது. பக்தர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

அலறியடித்து ஓடிய பக்தர்கள்
அலறியடித்து ஓடிய பக்தர்கள்

தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் சேர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் அனைவருமே பெண்கள் ஆவர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து கோயிலில் இருந்த மம்தா தேவி என்ற பக்தர் கூறுகையில், ”செவ்வாய்க் கிழமையன்று இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஷீட்லா மாதா தரிசனத்திற்கு மக்கள் வருகிறார்கள்.

நாங்களும் பாட்னாவில் இருந்து தரிசனத்திற்கு வந்துள்ளோம். ஆனால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துவிட்டனர். தவறான நிர்வாகத்தால் இது நடந்தது. இங்கு கூட்டம் அதிகம். நிர்வாகம் இங்கு இல்லை” என்கிறார்.

சம்பவம் குறித்து ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கின்றன. ஒரு படத்தில், ஒரு ஆண், ஒரு பெண்ணிற்கு அவசர உதவி செய்வது போன்றும், மற்றொரு பெண், சுயநினைவற்ற நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.