முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.

இன்றைய பகுதிக்கு தெலுங்கு படமான ‘தசரா’ படத்தின் தமிழ்ப் பதிப்பு பாடலான ‘மைனரு வேட்டி கட்டி’ பாடல் பற்றி, பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசினோம். இப்பாடல் உருவான விதம் முதல் இதற்கு கிடைத்த பாராட்டுகள் என அனைத்தையும் நம்மிடையே விவரித்தார்.
பாடலாசிரியர் முத்தமிழ், “‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுமே எனக்கு திடீரெனக் கொடுக்கப்பட்ட பாடல்தான். இந்தப் பாடலும் பெரியளவில் ஹிட்டானது. என் மீது எப்போதுமே சந்தோஷ் நாராயணனுக்கு நம்பிக்கை இருக்கும். சந்தம், டியூனுக்குள் வார்த்தைகளை உட்கார வைப்பது என என்னிடம் எந்தப் பிரச்னையும் இருக்காது என சந்தோஷ் என்னை நம்புவார்.
அதனால்தான் நெருக்கடியான நேரத்தில் அவர் என்னைத் தேடி வருவார். அப்படி அர்ஜெண்டான நேரத்தில்தான் இந்தப் பாடலையும் என்னை எழுதச் சொன்னார் சந்தோஷ் நாராயணன். தெலுங்கு படமான இதற்கு சென்னையில் தமிழ்ப் பாடல்களுக்கான ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது.

ஆடியோ லான்சிற்கு முந்தைய நாள்தான் இந்தப் பாடலை என்னை எழுத சொன்னார் சந்தோஷ் நாராயணன். நானும் நீண்ட நாட்களாக ‘மைனரு வேட்டி கட்டி’ மாதிரியான பாடல் அமைய வேண்டும் எனக் காத்திருந்தேன் எனலாம். ஏனெனில், இந்தப் பாடலொரு ஃபோக் மெலடி (Folk Melody). இது போன்ற பாடல்கள் எழுத வேண்டும் என எனக்குள் ஆசை இருந்தது.
அதை இப்பாடல் நிறைவேற்றியது. இன்று ரீல்ஸ்கள் மூலமாக பாடல்களுக்கு வேறொரு ரீச் கிடைக்கிறது. ஆனால், முதன் முதலில் ரீல்ஸ்களில் டிரெண்டான பாடல் ‘மைனரு வேட்டிகட்டி’தான். ரீல்ஸ் மூலமாக இந்தப் பாடலுக்கு பேன் இந்தியா ஹிட் கிடைச்சது எனலாம்.
இந்தப் பாடலுக்குப் பிறகுதான் ‘காதல் கப்பல்’ பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது.” என்றவர், “‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு முதலில் தெலுங்கு வெர்ஷனைதான் தயார் செய்தார்கள். அதைக் கேட்டப் பிறகுதான் நான் தமிழில் எழுதினேன். தமிழ் வெர்ஷன் பெரியளவில் ஹிட்டான பிறகு தெலுங்கில் பாடகி தீ பாட, மீண்டும் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தார்கள்.
இந்தப் பாடலுக்கு, வரிகளின் சவுண்டு மிக முக்கியமானதாக அமைந்தது எனலாம். ‘மைனரு வேட்டி கட்டி’, ‘மச்சினி’, ‘மனசுல அம்பு’ என இந்தப் பாடலுக்கு பல சவுண்டான வார்த்தைகள் அமைந்துவிட்டன. அது இந்தப் பாடல் இத்தனை வைரலானதற்கு ஒரு காரணம் என்பேன்.

சொல்லப்போனால், ரெக்கார்டிங் சமயத்திலேயே இந்தப் பாடல் நன்றாக வரும் என வாழ்த்தினார்கள். சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ரெக்கார்டிங்கின் போதே வரிகளை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு வாழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தப் பலரும், இதுதான் அவர்களுடைய ப்ளேலிஸ்டில் இப்போது ரீப்பீட் ஆக ஓடிக் கொண்டிருக்கும் பாடல் எனச் சொல்லி வாழ்த்தினார்கள்.
எப்போதும் பிறமொழி படங்களுக்கு தமிழில் பாடல்கள் எழுதுவது சவால்தான். ஏனெனில், அந்தப் பாடலின் அர்த்தம் கேட்டு மொழிப்பெயர்க்கும்போது அது சரிவர அமையாமல்விட்டால், அது இங்கு பெரியளவில் டிரோல் செய்யப்படும். அப்படியும் பல பாடல்கள் இங்கு பல ட்ரோல்களைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், இந்தப் பாடலுக்கு நானாகவே சூழல் கேட்டு வரிகளை எழுதினேன். நான் முன்பு குறிப்பிட்டது போலவே, இந்தப் பாடலுக்கு அமைந்த சவுண்ட்டான வார்த்தைகள் எனக்கு தொடக்கத்திலேயே பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

எழுதும்போதே, இந்தப் பாடல் ஹிட்டாகும் என நினைத்தேன். அப்படி இந்தப் பாடல் நான் நினைத்ததைவிட பெரிய ஹிட்டானது. நான் கொடுத்ததைவிட, இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பல வெர்ஷன்களைக் கொடுத்தார்கள். நான் நினைத்துப் பார்க்காத வடிவத்தில் பல்வேறு வகைகளில் இதனை எடிட் செய்தார்கள். அதுவும் வடிவேலு சாருக்காக செய்த வெர்ஷனெல்லாம் வேற லெவல்! இப்படி இந்தப் பாடல் எனக்குக் கொடுத்த சந்தோஷமான தருணங்கள் ஏராளம்” எனப் புன்னகையோடு முடித்துக் கொண்டார்.