சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் – அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடுத்து பார்த்தபோது அதில் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. உடனே வங்கியிலிருந்த சக ஊழியர்களிடம் கிளை மேலாளர் அகமது விசாரித்தார்.

பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவை அவர் ஆய்வு செய்தார். அப்போது பர்தா அணிந்த பெண், ஒருவர் மணிபர்ஸை தவற விட்டது தெரியவந்தது. அந்த பெண் யாரென்று தெரியவில்லை. அதனால், தங்க நகைகள் இருந்த மணிபர்ஸ் குறித்த தகவலை வங்கியில் உள்ள மேலதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக வைத்திருந்தார். 5 நாள்களாகியும் அந்த நகைகளைத் தேடி யாரும் வரவில்லை. அதனால் அந்த நகைகள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வங்கி மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவு EDF-3 புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது
கைது

விசாரணையில் அந்த தனியார் வங்கியில் ஏற்கனவே வேலை பார்த்த பத்மபிரியா என்பவர்தான் நகைகளை தவற விட்டது தெரியவந்தது. உடனே அவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “நகைகளை தவற விட்ட வங்கியின் முன்னாள் ஊழியர் பத்மபிரியா மீது வங்கி லாக்கரில் வைத்திருந்த வாடிக்கையாளரின் நகைகளைத் திருடியது தொடர்பாக ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற பத்மபிரியா, ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். லாக்கரில் இருந்து ஏற்கனவே திருடிய தங்க நகைகளை வங்கியில் யாருக்கும் தெரியாமல் திரும்ப வைத்துவிட பத்மபிரியா திட்டமிட்டிருக்கிறார். இதற்காகவே தன்னை யாரும் அடையாளம் கண்டுக்கொள்ள கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வங்கிக்கு வந்திருக்கிறார். பின்னர், லாக்கரில் திருடிய நகைகளை வைக்க முடியாததால் அதை வங்கியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் பத்மபிரியா நினைத்தது ஒன்று அங்கு நடந்தது ஒன்று. அவர் விட்டுச் சென்ற தங்க நகைகள் குறித்து எங்களிடம் கிளை மேலாளர் புகாரளித்தால் அது தொடர்பாக விசாரித்து பத்மபிரியாவை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து பத்ம பிரியாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.