அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காண்டு தனது அதிகாரம் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனது மனைவி, தாய் மற்றும் மருமகன் ஆகியோருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,270 கோடி மதிப்பிலான பொதுப்பணி ஒப்பந்தங்களை வழங்கியதாக ‘சேவ் மான் ரீஜியன் ஃபெடரேஷன்’ மற்றும் ‘வாலண்டரி அருணாச்சல் சேனா’ ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

பெமா காண்டு
பெமா காண்டு

இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் முதல்வரின் குடும்ப நிறுவனங்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். அதைத் தொடர்ந்து, “இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜனவரி 1, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமா என்பது குறித்து சிபிஐ 16 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் 4 வாரங்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். எந்தவொரு ஆவணமும் அழிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு வாரத்திற்குள் ஒரு ‘நோடல் அதிகாரியை’ மாநிலத் தலைமைச் செயலாளர் நியமிக்க வேண்டும்.” என அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை உத்தரவு முதல்வர் பேமா காண்டு தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.